Posted in

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% சம்பள உயர்வு! கூடுதல் விலை வசூலித்தால் டிஸ்மிஸ் என அமைச்சர் அதிரடி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் (TASMAC) சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் 23,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு 25 சதவீதம் வரையிலான அதிரடி சம்பள உயர்வை வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் கே. விக்னேஷ் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த ஊதிய உயர்வு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும், இதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ₹110.74 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

புதிய ஊதிய மாற்றத்தின்படி, உதவி விற்பனையாளர்களின் மாதாந்திரச் சம்பளம் ₹14,030-ல் இருந்து ₹17,925 ஆகவும், விற்பனையாளர்களின் சம்பளம் ₹15,530-ல் இருந்து ₹19,413 ஆகவும் உயர்த்தப்படுகிறது. அதேபோல, கடைகளின் மேற்பார்வையாளர்களின் (Supervisors) சம்பளம் ₹17,850-ல் இருந்து ₹22,313 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், டாஸ்மாக் தொழிலாளர்களின் 20 ஆண்டுகால நீண்டநாள் கோரிக்கையான இஎஸ்ஐ (ESI) மருத்துவக் காப்பீட்டு வசதியை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வுடன் சேர்த்து டாஸ்மாக் ஊழியர்களுக்குக் கடுமையான எச்சரிக்கையையும் அமைச்சர் விக்னேஷ் விடுத்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த எம்.ஆர்.பி (MRP) விலையை விடக் கூடுதலாக ₹10 வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், குறைந்த சம்பளமே இதற்குக் காரணம் என ஊழியர்கள் தெரிவித்திருந்தனர். தற்போது சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதால், இனி பாட்டிலுக்குக் கூடுதல் விலை வசூலித்தால் பணிநீக்கம் (Dismissal) வரை கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

ஊழியர்களின் சம்பள உயர்வின் காரணமாக மதுபானங்களின் விலையில் எந்தவித மாற்றமும் உயர்த்தப்படாது என்றும், சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இது செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுப் பெட்டிகளை இறக்கும் கூலி, கடைகளுக்கான மின்சாரக் கட்டணம் மற்றும் வாடகை சார்ந்த பிரச்சனைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்றும், தற்காலிகமாக பார்களின் உரிமங்கள் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.