Posted in

 கோவில் நில மோசடி! தவெக அரசுக்கு எதிராக அதிமுக போர்க்கொடி: அமைச்சர் ரமேஷுக்கு நெருக்கடி!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மடத்திற்குச் சொந்தமான சுமார் ₹100 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்குப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், ஆளும் தமிழக வெற்றிக் கழகப் (தவெக) அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ஜூலை 25-ஆம் தேதி ஜூலை சனிக்கிழமை காலை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நடவடிக்கை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ். ரமேஷிற்குப் பெரும் அரசியல் நெருக்கடியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை மற்றும் மடத்திற்குப் பாத்தியப்பட்ட 1.40 ஏக்கர் நிலம், முந்தைய ஆட்சியின் போது ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஆனால், முறையான வழிமுறைகளைப் பின்பற்றாமல், கொடைக்கானல் சார் பதிவாளரை மாற்றலாகக் கொண்டுவந்து, அவசர அவசரமாக ₹2 கோடிக்குத் தனியாருக்குப் பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் வெடித்துள்ளன. பக்தர்கள் மற்றும் ஆன்மீக அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறையில் புகார்கள் குவிந்தன.

இந்த நில மோசடி வழக்கை தற்போதைய தவெக அரசு சிபிசிஐடி (CB-CID) விசாரணைக்கு மாற்றியுள்ள போதிலும், அது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என்றும், பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகளைக் காப்பாற்றவே அரசு முயல்வதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். மேலும், இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளும், அதிகார துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டுமென்றால், வழக்கின் விசாரணையை உடனடியாகச் சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ். ரமேஷ், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே சார் பதிவாளர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், இதில் எந்தவித ஊழலும் நடைபெறவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் தவெக அரசின் மீது வீண்பழி சுமத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே ₹100 கோடி மதிப்பிலான திருக்கோவில் சொத்து கைமாறிய விவகாரம், தவெக அரசுக்கும் குறிப்பாகத் துறை அமைச்சர் ரமேஷிற்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.