Posted in

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்துக்கு முழு ஆதரவு! தவெக அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், அத்தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் டெல்லியில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் தமிழக அரசு தங்களது முழுமையான ஆதரவை அளிப்பதாகத் தமிழகப் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். டெல்லியில் மாணவர் அமைப்புகள் குரல் எழுப்புவதற்கு முன்பிருந்தே, அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்களைப் பறிகொடுத்துத் தமிழகம் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது ஒன்றே இதற்கான நிரந்தரத் தீர்வாகும் என்பதில் தவெக சமரசமற்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மருத்துவச் சேர்க்கை உரிமைகளை மாநில அரசிடம் ஒப்படைப்பதே நியாயமானது என்றார். டெல்லியில் அமைதியான முறையில் ஜனநாயகப் பூர்வமாகப் போராடும் மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது மத்திய அரசு அடக்குமுறையைப் பிரயோகிப்பதையும் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் ஏற்க முடியாது எனக் கண்டித்துள்ளார்.

மேலும், கல்வித் துறையில் மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில், கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு (State List) மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்குத் தவெக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் சட்டரீதியான அல்லது அரசியலமைப்புச் சார்ந்த தடைகள் இருந்தால், இடைக்கால ஏற்பாடாக மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் “சிறப்புப் பொதுப் பட்டியலை” (Special Concurrent List) உருவாக்க வேண்டும் என்ற யோசனையையும் தமிழக அரசு முன்வைத்துள்ளது.

முன்னதாக, தலைமைச் செயலகம் முன்பாக நீட் தேர்வுக்கு எதிராகத் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பாடகர் ‘தெருக்குரல்’ அறிவைச் சந்தித்துப் பேசியது தொடர்பாக எழுந்த கருத்துகளுக்குப் பதிலளித்த அவர், மாணவர் நலனுக்காகவும் அவர்களின் உரிமைக் குரலுக்காகவும் தமிழக அரசு என்றும் உறுதியுடன் துணைநிற்கும் என்று தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ஒழிப்பதற்கான ஒவ்வொரு நடவடிக்கையையும் தவெக அரசு மிக உறுதியுடன் எடுத்து வைக்கும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீண்டும் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.