தமிழக வெற்றிக் கழகச் (தவெக) சட்டமன்ற உறுப்பினரிடம் ₹35 கோடி லஞ்ச பேரம் பேசப்பட்டதாகத் தொடரப்பட்ட சர்ச்சைக்குரிய வழக்கில், திமுக மூத்த தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி, சென்னை D1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார். சென்னை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் ஆஜரான அவரிடம், காவல் துறை அதிகாரிகள் பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ டாக்டர் என். இளையராஜாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள், சட்டப்பேரவைச் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் ₹35 கோடி தருவதாக ஆசை வார்த்தை காட்டியதாகவும், மறுத்த போது மிரட்டல் விடுத்ததாகவும் பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் உள்ளிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக, இந்த லஞ்ச பேர நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் இருப்பதாகக் காவல் துறை தரப்பில் வழக்கு விசாரணை விரிவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது.
அதன்படி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு வருகை தந்த செந்தில் பாலாஜியிடம், காவல் துறை உயர் அதிகாரிகள் வழக்கில் தொடர்புடைதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டனர். விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற நிலையில், சேகரிக்கப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.