பிரிட்டனின் சவுத்தாம்ப்டன் பகுதியில் 18 வயது பல்கலைக்கழக மாணவரான ஹென்றி நோவாக்கை (Henry Nowak) கொடூரமாகக் குத்திக் கொன்ற வழக்கில் 21 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட விக்ரம் திக்வா (Vickrum Digwa), நாட்டின் மிகக் கடுமையான பாதுகாப்பு நிறைந்த ‘எச்.எம்.பி பிராங்க்லேண்ட்’ (HMP Frankland) சிறைக்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பயத்தில் நடுங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘மான்ஸ்டர் மேன்ஷன்’ (Monster Mansion) என அழைக்கப்படும் இந்தச் சிறையில் உள்ள சக கைதிகளின் அச்சுறுத்தலால் திக்வாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்தின் கவுண்டி டர்ஹாம் பகுதியில் அமைந்துள்ள ஃபிராங்க்லேண்ட் சிறையில் கொலையாளிகள், பாலியல் குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல சிறுவர் கொலையாளி இயன் ஹன்ட்லி (Ian Huntley) மீது சக கைதி ஒருவர் கூர்மையான உலோகக் கம்பியால் கொடூரத் தாக்குதல் நடத்திப் படுகொலை செய்தார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஃபிராங்க்லேண்ட் சிறைக்கு மாற்றப்படும் பிற பிரபல குற்றவாளிகள் தங்களின் உயிருக்கு பயந்து நடுங்கும் சூழல் உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில், வழியில் நடந்து சென்ற மாணவர் ஹென்றி நோவாக்கை விக்ரம் திக்வா கத்தியால் குத்தியதோடு, காவல்துறை அதிகாரிகளிடம் தான் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளானதாகப் பொய் புகாரளித்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய மாணவர் நோவாக்கை அதிகாரிகள் தவறாகக் கைது செய்து கைவிலங்கிட்ட நிலையில், அவர் “என்னால் மூச்சுவிட முடியவில்லை” எனக் கதறியபடி பரிதாபமாக உயிரிழந்த வீடியோ காட்சி பிரிட்டன் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள விக்ரம் திக்வாவை உயர் பாதுகாப்பு சிறையான ஃபிராங்க்லேண்டிற்கு மாற்ற சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், ‘மான்ஸ்டர் மேன்ஷன்’ சிறையில் தனக்கு ஆபத்து காத்திருப்பதாகவும், சக கைதிகள் தன்னைத் தாக்கிவிடக்கூடும் என்றும் கூறி அங்குச் செல்ல திக்வா மறுத்து வருவதாகவும், அவரது சட்டக் குழுவினர் இது தொடர்பாகச் சிறைத்துறையிடம் முறையிட்டு வருவதாகவும் பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.