Posted in

அமைச்சர் மீது முதல்வர் கடும் அப்செட்: ஜெகதீஸ்வரிக்கு வரப்போகுது செக்!

தமிழகத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதத்தில் லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் திரும்பியதும் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கே.ஜெகதீஸ்வரியின் செயல்பாடுகள் மீது முதலமைச்சர் விஜய் கடும் கோபத்தில் இருப்பதாகவும், அவரைப் பதவிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி போதிய தயாரிப்பு இல்லாமல் வந்து பதிலளித்ததும், சட்டமன்றத்தில் சில குளறுபடிகளுடன் பேசியதும் முதல்வர் தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், துறை ரீதியான நிர்வாக நடைமுறைகளைச் சரியாகக் கையாளாததுடன், மேடைகளிலும் பொதுக்கூட்டங்களிலும் தேவையின்றிப் பேசி சர்ச்சைகளைக் கிளப்பி வருவது முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்றுள்ளது.

இதுமட்டுமன்றி, சொந்தக் கட்சியினரையும் தொண்டர்களையும் தொலைபேசியில் மிரட்டியதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது முதல்வர் அலுவலகத்திற்குத் (CMO) புகார்கள் குவிந்து வருகின்றன. இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாளில், அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் விவாதப் பொருளானது. மேலும், அரசுப் பணியில் புரோட்டோகால் பிரச்சனை தொடர்பாக சக அமைச்சருடன் பகிரங்கமாக மோதிக்கொண்டதும் கட்சியின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தலைமை கருதுகிறது.

இத்தகைய தொடர் புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், முதலமைச்சரின் லண்டன் பயணம் முடிவடைந்ததும் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தில், அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக வேறொரு பெண் சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பதவி வழங்கிச் சமன் செய்ய தவெக தலைமை முடிவெடுத்துள்ள நிலையில், மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.