Posted in

 2-வது நாளாகக் காவல் நிலையத்தில் ஆஜர்!  தவெக எம்.எல்.ஏ குதிரைபேர வழக்கில் செந்தில் பாலாஜியிடம் தீவிர விசாரணை!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி. இளையராஜாவிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசி ஆளும்கட்சியைப் பலவீனப்படுத்த முயற்சி மேற்கொண்டதாகப் பதிவு செய்யப்பட்ட குதிரைபேர வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆர்.வி. அசோக் குமார் ஆகியோர் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 2-வது நாளாக ஆஜராகிக் கையெழுத்திட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜரான இருவரிடமும் காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானத்தின் போது தவெக நிலைப்பாட்டிற்கு எதிராக வாக்களிக்கத் தனக்கு ரூ.35 கோடி லஞ்சம் ஆசை காட்டப்பட்டதாக எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே 14 பேரை வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கும் தொடர்பிருப்பதாகக் கூறி அவர்களைக் கைது செய்யப் போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில், இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மறுஉத்தரவு வரும் வரை தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. அதன்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிணைச் சான்றுகளைச் சமர்ப்பித்த செந்தில் பாலாஜி சகோதரர்கள், காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி வருகின்றனர்.

காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையிலான சிறப்புப் படையினர், கைது செய்யப்பட்ட 14 பேரிடம் திரட்டப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். “குதிரைபேரம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன? கைது செய்யப்பட்ட நபர்களுடன் உங்களுக்கு என்ன தொடர்பு?” போன்ற கேள்விகளுக்கு அவர் பதிலளித்து வரும் நிலையில், இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் காவல் துறை திட்டமிட்டுள்ளது.