Posted in

ஈரானின் புதிய உயர்மட்ட தலைவர் குறித்து அதிர்ச்சி தரும் அமெரிக்க உளவுத்துறை!

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அயதுல்லா சையத் மொஜ்தாபா கமேனி (Mojtaba Khamenei), தனது தந்தை அலி கமேனியை விட அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில் மிகக் தீவிரமான முனைப்புடன் செயல்பட்டு வருவதாக அமெரிக்க உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் கூட்டுக் வான்வழித் தாக்குதலில் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் அதிகாரம் பெற்றுள்ள புதிய தீவிரப்போக்கு அரசு, அதிநவீன அணு ஆயுதங்களை விரைவாகக் கட்டியெழுப்பத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க உளவுத்துறை ரகசியமாகக் கைப்பற்றிய உரையாடல்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், மறைந்த அலி கமேனி அணு ஆயுதம் தயாரிப்பதில் சில தயக்கங்களைக் கொண்டிருந்த போதிலும், அவரது மகனான மொஜ்தாபா கமேனிக்கு அத்தகைய எவ்விதத் தயக்கமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், ஏவுகணைகளில் பொருத்தித் தொலைதூர இலக்குகளைத் தாக்கக்கூடிய சிறிய ரக ‘ஹைட்ரஜன் குண்டுகளை’ (Thermonuclear Warheads) உருவாக்கவே அவர் முழு ஆதரவு அளித்து வருகிறார் என்றும் நியூயார்க் டைம்ஸ் (The New York Times) நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களிலிருந்து தங்களின் அணுசக்தி சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக, ஈரான் தனது செறிவூட்டல் இயந்திரங்களை (Centrifuges) மத்திய ஈரானில் உள்ள கோஹ்-இ கொலாங் (Mount Kouh-e Kolang) பனிமலைக்கு அடியில் உள்ள அதிநவீன நிலத்தடிப் பாதைகளுக்கு மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவுடனான தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளுக்கு மொஜ்தாபா கமேனி ஒப்புக்கொண்ட போதிலும், “ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்காது” என்ற முதன்மை நிபந்தனையை அவர் கொள்கை ரீதியாக ஏற்கவில்லை என்றும் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில் உள்ள தீவிரப்போக்கு தளபதிகள் மற்றும் தலைவர்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைக் காப்பாற்ற அணு ஆயுதம் ஒன்றே ஒரே தீர்வு என்பதில் உறுதியாக உள்ளதாக உளவுத்துறை மதிப்பீடுகள் கூறுகின்றன. அமெரிக்க உளவுத்துறையின் இந்த அதிரடி அறிக்கை வெளியாகியுள்ள சூழலில், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தடைகளை மீண்டும் தீவிரப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.