அதிமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், பி. சத்தியபாமா, எஸ். ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 பேருக்கு எதிரான தகுதிநீக்க வழக்கில், கூடுதல் விளக்கங்களை அளிப்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் சம்பந்தப்பட்ட 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் வரும் ஜூலை 30-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் ஆர். சாந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் கடந்த மே மாதம் நடைபெற்ற நம்பிக்க வாக்கெடுப்பின் போது கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்ததாகக் கூறி, 25 எம்.எல்.ஏ.க்களைத் தகுதிநீக்கம் செய்யக்கோரி அதிமுக தலைமை சார்பில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் 21 எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கையை அதிமுக தலைமை வாபஸ் பெற்றுக்கொண்ட நிலையில், பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க மனுக்கள் மீது மட்டும் அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணையின்படி சபாநாயகர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
முன்னதாகச் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்களுக்கு அந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் இருமுறை நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமான மற்றும் வாய்மொழி விளக்கங்களைச் சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, மனுதாரரான எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்மனுதாரர்களான 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் ஒரே நாளில் தனித்தனியாகச் சபாநாயகர் முன் ஆஜராகித் தங்களது இறுதி விளக்கங்களை அளிக்க வேண்டும் என பேரவைச் செயலகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வரும் ஜூலை 30-ஆம் தேதி காலை 11.00 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தலா 30 நிமிடங்கள் ஒதுக்கி 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களும், அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியும் சபாநாயகர் அறையில் நேரில் ஆஜராக வேண்டும் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு தரப்பின் இறுதி விசாரணைகளுக்குப் பிறகு, இந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க விவகாரத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தனது இறுதி தீர்ப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசியல் களத்தில் பெரும் சுவாரஸ்யம் கூடியுள்ளது.