Posted in

திமுகவை வழிநடத்த தகுதி இருக்கா? உதயநிதிக்கு தைரியம் இருந்தால் வாக்கெடுப்பு நடத்தட்டும் என நிர்மல் குமார் சவால்!

நீட் (NEET) தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை திசைதிருப்ப திமுக முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “திமுகவை வழிநடத்தும் தகுதி உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கிறதா அல்லது கனிமொழிக்கு இருக்கிறதா என அவர்களின் கட்சியினரிடையே வாக்கெடுப்பு நடத்த உதயநிதிக்கு தைரியம் இருக்கிறதா?” என பகிரங்கச் சவால் விடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இந்த காரசார விமர்சனங்களை முன்வைத்தார்.

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உணர்வுபூர்வமாகப் போராடி வரும் சூழலில், திமுகவினர் இதில் தேவையில்லாத வேலைகளைச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள் என அமைச்சர் குற்றம் சாட்டினார். “ஆட்களுக்கு ரூ.200 பணம் கொடுத்து ‘Gen Z DMK’ என்ற டி-சர்ட்டை அணியச் செய்து போராட்டக் களத்தில் உட்கார வைத்து உதயநிதி நாடகமாடுகிறார். முதலில் ‘Gen Z’ என்றால் என்னவென்பதை யாராவது உதயநிதிக்குச் சொல்லிக் கொடுத்துப் புரிய வைக்க வேண்டும்; இதுபோன்ற கோமாளித்தனமான வேலைகளை விட்டுவிட்டு அவர் ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று சாடினார்.

திமுகவின் தலைமைப் பொறுப்பு மற்றும் உட்கட்சி ஜனநாயகம் குறித்துப் பேசிய நிர்மல் குமார், அண்ணா தொடங்கிய பாரம்பரியமிக்க திமுகவை வழிநடத்துவதற்கு உதயநிதிக்கு தகுதி உள்ளதா அல்லது கனிமொழிக்கு தகுதி உள்ளதா என்று கட்சி நிர்வாகிகளிடம் ஒரு ரகசிய வாக்கெடுப்பை நடத்திப் பார்க்கட்டும் என்றார். “அந்த வாக்கெடுப்பின் முடிவுகளைக்கூட உதயநிதி வெளியில சொல்ல வேண்டியதில்லை; ஏனெனில், அவரது தகுதி என்னவென்பது அவர்களின் சொந்தக் கட்சியினருக்கே நன்றாகத் தெரியும். அதை வைத்து உதயநிதி முதலில் ஒரு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

தவெக (TVK) அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும், மாணவர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்துத் தவெகவினர் எவ்விதக் கட்சி அடையாளமும் இன்றி ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அவர் கூறினார். மாணவர்களின் தீவிரப் போராட்டத்தின் காரணமாகவே மத்திய கல்விச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் பதிலளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ள நிலையில், திமுகவினர் இந்தப் போராட்டத்தின் கிரெடிட்டைத் தங்களது அரசியலுக்காகப் பயன்படுத்த முயல்வதாக அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாகச் சாடினார்.