அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தவரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான ஆர். வைத்திலிங்கம் மீதான ரூ. 28 கோடி லஞ்ச ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) மீண்டும் மேல் விசாரணை நடத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையைத் திரும்பப் பெற அனுமதித்த நீதிபதி எஸ். கார்த்திகேயன், விசாரணையை விரைந்து முடித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் கட்டுமான நிறுவனம் 1,400 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டத் திட்ட அனுமதி வழங்கியதற்காக அப்போதைய அமைச்சர் வைத்திலிங்கம் ரூ. 28 கோடி லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த லஞ்சப் பணம் வைத்திலிங்கத்தின் மகன்களுக்குச் சொந்தமான முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக ‘அறப்போர் இயக்கம்’ அளித்த புகாரின் அடிப்படையில், 2024 செப்டம்பரில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இருப்பினும், கடந்த ஜனவரி மாதம் வைத்திலிங்கம் மாற்று முகாமிற்குச் சென்றதைத் தொடர்ந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கை முடித்து வைக்கும் அறிக்கை (Closure Report) தாக்கல் செய்யப்பட்டது. இமுடிவை எதிர்த்து அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதுடன், வழக்கில் மேலும் சில முக்கிய ஆதாரங்களைத் திரட்ட வேண்டியுள்ளதால் மேல் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் மீண்டும் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன், வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையைத் திரும்பப் பெற அனுமதி வழங்கி, லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக மேல் விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டார். 3 மாத காலக்கெடுவுக்குள் விரிவான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கெடு விதிக்கப்பட்டுள்ளதால், வைத்திலிங்கம் மீதான இந்த ஊழல் வழக்கு மீண்டும் வேகம் எடுத்துள்ளதுடன் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.