அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமை என்றும், வெறும் போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காகவே காவல்துறையினர் லத்தி சார்ஜ் போன்ற கொடூரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது என்றும் இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி (CJI) சூர்யா காந்த் அமர்வு மிகக் காரசாரமாகக் கருத்து தெரிவித்துள்ளார். தேர்வு வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக நாடு முழுவதிலும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்களில் காவல்துறை வரம்பு மீறிச் செயல்படுவதாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த போது நீதிமன்றம் இந்த முக்கிய அவதானிப்புகளை மேற்கொண்டது.
தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடிப்படி தாக்குதல்கள் தொடர்பான மனுக்களை அவசர வழக்காக எடுத்து விசாரித்தது. “ஒரு நாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த முழு உரிமையும் உத்தரவாதமும் உள்ளது. ஒருவேளை காவல்துறையினர் தரப்பில் எல்லை மீறிய அத்துமீறல்கள் அல்லது தாக்குதல்கள் நடந்திருந்தால், அது சுயாதீனமான அமைப்பினால் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்” என தலைமை நீதிபதி சூர்யா காந்த் தெரிவித்தார்.
அதேவேளையில், போராட்டங்களின் போது காவல்துறை அதிகாரிகள் மற்றும் போராட்டக்காரர்கள் இருதரப்பிலும் ஏற்படும் காயங்கள் கவலையளிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகள் (Uniform National Protocol) வகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். “இது டெல்லிக்கு மட்டுமேயான பிரச்சனை அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பொதுவானது. போராட்டங்களின் போது வன்முறை வெடிப்பதையும், அதேசமயம் காவல்துறை அதிகப்படியான பலத்தைப் பிரயோகிப்பதையும் தவிர்க்கும் வகையில் சுய ஒழுக்கம் மற்றும் தெளிவான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியது.
மேலும், காவல்துறையினருக்குப் பாதுகாப்பிற்கான தலைக்கவசங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் சரியாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மாணவர் போராட்டங்கள் மற்றும் காவல்துறை நடவடிக்கை தொடர்பான அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைத்து விரிவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அழுத்தமான கருத்துக்கள், நாடு முழுவதும் உள்ள காவல்துறைக்குத் தங்களின் அதிகார வரம்பை நினைவூட்டும் முக்கிய அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.