Posted in

எஸ்பிஐ மேலாளரைத் தாக்கிய அழகிரி மகள் கயல்விழி: 2 மணி நேர விசாரணைக்கு பின் கிளம்பிய ட்விஸ்ட்!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.க.கருணாநிதியின் பேத்தியுமான கயல்விழி, சென்னையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி மேலாளரை அவரது அறைக்குள்ளேயே வைத்துக் கன்னத்தில் அறைந்த சம்பவம் தமிழக அரசியலிலும் வங்கித் துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சென்னை அடையாறில் உள்ள வணிகக் கட்டடம் ஒன்றில் எஸ்பிஐ வங்கியின் என்ஆர்ஐ (NRI) கிளை இயங்கி வருகிறது. அந்தக் கட்டடத்தின் உரிமையாளரான கயல்விழி அழகிரியிடம், கட்டடத்தில் உள்ள பழுதடைந்த லிஃப்ட்டை (Lift) உடனே சரி செய்து தருமாறு வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கயல்விழி நேரில் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென வங்கி மேலாளரின் கன்னத்தில் பளார் என அறைந்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து எஸ்பிஐ வங்கியின் மண்டலத் தலைமை மேலாளர் நமச்சிவாயம் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் அத்துமீறி நுழைதல், தகாத வார்த்தைகளால் பேசுதல், தாக்குதல் நடத்துதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 முக்கியப் பிரிவுகளின் கீழ் கயல்விழி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், “ஊழியர்களின் கண்ணியமும் பாதுகாப்பும் முதன்மையானது” என எஸ்பிஐ நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிட்டது.

வழக்குப் பதிவைத் தொடர்ந்து காவல் துறை அனுப்பிய சம்மனின் அடிப்படையில், கயல்விழி அழகிரி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். காவல் துறையினர் அவரிடம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்திய நிலையில், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா அல்லது முன்ஜாமீன் கோரப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது. விசாரணைக்குப் பின் அவர் சட்டப்பூர்வ நடைமுறைகளுடன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காவல் துறை தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.