தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் லண்டன் சுற்றுப்பயணம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது எனத் தவெக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், ஜோதிடரின் ஆலோசனையின் பேரிலேயே இந்த வெளிநாட்டுப் பயணம் திட்டமிடப்பட்டதாக எழுந்துள்ள புதிய வதந்தி அரசியல் வட்டாரங்களில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் ஜாதகத்தில் உள்ள சில கிரகப் பெயர்ச்சி மாறுதல்கள் மற்றும் தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காகவே அவர் லண்டன் சென்றுள்ளதாக ஆங்கில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றியைக் துல்லியமாகக் கணித்துக் கூறிப் புகழ்பெற்ற பிரபல ஜோதிடர் ராதா பண்டிட் என்பவரின் ஆலோசனையின் பேரிலேயே இந்த லண்டன் பயணம் மேற்கொள்ளப்பட்டதாக வதந்திகள் கூறுகின்றன. முதலமைச்சரின் ஜாதகத்தில் ராகு-கேது மற்றும் சனி கிரக நிலைகளின் தாக்கம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மேலைநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதன் மூலம் அரசியல் எதிர்ப்புகளையும் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் தடைகளையும் தகர்க்க முடியும் என ஜோதிட ரீதியாக அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த வதந்திகளைத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் அரசுத் தரப்பும் முற்றிலும் மறுத்துள்ளனர். லண்டன் பயணத்தின் போது சுமார் ₹12,300 கோடிக்கும் அதிகமான முக்கியத் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாகன உதிரிபாகத் துறைகளில் பல பன்னாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே லண்டனில் சில்வர்ஸ்டோன் கார் பந்தயப் பாதையில் நடிகர் அஜித்தைச் சந்தித்தது மற்றும் ரசிகர் சந்திப்பு ரத்து போன்ற விவகாரங்களால் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் சூழலில், ஜோதிடரின் அறிவுறுத்தலின் பேரிலேயே பயணம் அமைந்தது என்ற இந்த புதிய வதந்தி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. முதலமைச்சரின் லண்டன் பயணம் அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் இருவேறு கோணங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.