திமுக கொங்கு மண்டல முக்கியப் புள்ளியும் முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி மற்றும் அவரது நெருங்கிய ஆதரவாளர்களின் இல்லங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் இன்று காலை முதலே அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் உள்ள அவரது பூர்வீக இல்லம் உட்பட மொத்தம் 6 இடங்களில் ஒரே நேரத்தில் இந்தச் சோதனை தொடங்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று காலை 7 மணியளவில் கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டிற்குள் நுழைந்தனர். சோதனையின் போது வீட்டில் இருந்த அவரது பெற்றோரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டதோடு, முக்கியமான ஆவணங்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.
செந்தில் பாலாஜியின் வீடு தவிர, அவரது முன்னாள் உதவியாளரான சுப்பிரமணியன், வளையத்தில் உள்ள அவரது இல்லம், கோயம்பள்ளியில் உள்ள திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் பாஸ்கர் இல்லம், மற்றும் கோதை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவரது ஆதரவாளர்களான கார்த்திக் மற்றும் அதிபன் ரமேஷ் ஆகியோரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனையை விரிவுபடுத்தியுள்ளனர்.
தவெக சட்டமன்ற உறுப்பினரைத் தங்கள் பக்கம் இழுக்க பேரம் பேசப்பட்டதாக எழுந்த வழக்கு மற்றும் முன்னெடுக்கப்பட்ட டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பில் இந்த லஞ்ச ஒழிப்பு அதிரடிச் சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனை நடைபெறும் பகுதிகளைச் சுற்றித் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதால், கரூரில் உச்சக்கட்ட அரசியல் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.