Posted in

அமைதி பேச்சுக்கே வேட்டு! ஜோர்டானில் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்.. டிரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த தற்காலிக ராணுவ நடவடிக்கை இடைவெளிக்குப் பிறகு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC) ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் குறிவைத்துத் திடீரென பேலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த அச்சுறுத்தலை ‘திடீர் தாக்குதல் முயற்சி’ எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (CENTCOM), ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளையும் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 5:45 மணியளவில் ஈரானில் இருந்து புறப்பட்ட பல பேலிஸ்டிக் ஏவுகணைகள், ஜோர்டானில் அமெரிக்கப் படைகள் மையம் கொண்டுள்ள ‘முவஃபக் சால்டி’ (Muwaffaq Salti) விமானப்படைத் தளத்தை நோக்கியே வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் அமெரிக்கப் வீரர்களுக்கோ அல்லது ராணுவ மையங்களுக்கோ எவ்விதச் சேதமும் ஏற்படவில்லை எனவும், நிலைமையைக் தீவிரமாகக் கண்காணித்து அமெரிக்கப் படைகள் உச்சகட்ட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமெரிக்கா தன் வான்வழித் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக, ஈரானிய விண்வெளிப் பிரிவுதான் ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் மத்திய கட்டளை மையத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக IRGC செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தொடர் எச்சரிக்கைகளை மீறி ஈரான் நடத்தியுள்ள இந்த திடீர் ஏவுகணைத் தாக்குதல் அதிபர் டிரம்பைக் கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. இதனால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் ராணுவத் தாக்குதல்கள் மீண்டும் இருமடங்கு தீவிரத்துடன் தொடங்கும் சூழல் உருவாகியுள்ளதால், மத்திய கிழக்கில் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.