தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இனி பெருமுதலாளிகள் மட்டுமின்றி அனைவரும் எளிதாகப் பங்கேற்கும் வகையில் டெண்டர் நடைமுறைகளில் பெரும் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வெளிப்படைத்தன்மையையும் தரத்தையும் உறுதி செய்யும் வகையில் டெண்டர் கோருதல் மற்றும் ஏலம் விடும் நடைமுறைகள் அனைத்தும் இனி ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளதாக முறைப்படி அறிவித்தார்.
புதிய வழிகாட்டுதல்களின்படி, அனைத்துக் கோயில்களுக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே சீரான விண்ணப்பப் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கோயில் வாரியாக மாறுபட்டு வந்த வைப்புத் தொகை (EMD) இனி மாநிலம் முழுவதும் 1 சதவீதம் எனவும், பாதுகாப்புத் தொகை 5 சதவீதம் எனவும் நிலையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஜிஎஸ்டி (GST) மற்றும் பேன் (PAN) எண்கள் இல்லாத நிறுவனங்கள் அல்லது நபர்கள் கோயில் டெண்டர்களில் பங்கேற்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலைப் புள்ளி (Lowest Value) கோருபவருக்கே உடனடியாக ஒப்பந்தம் வழங்கும் பழைய முறையை மாற்றி, குறைந்த விலை கோரியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளித்து விலையைக் குறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயில்களுக்குத் தேவையான பொருட்கள் மிகக் குறைந்த செலவில் கிடைக்கும் என்றும், ஒரே ஒப்பந்ததாரருக்கு வாய்ப்பளிக்காமல் 2 முதல் 3 பேருக்குப் பிரித்து வழங்கி காலதாமதம் மற்றும் தரக்குறைபாடுகளைத் தவிர்க்க அபராத விதிமுறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் விளக்கினார்.
கோயில்களில் பக்தர்களின் வசதிக்காகவும் முறைகேடுகளைத் தடுக்கவும் இனி பிஓஎஸ் (POS) இயந்திரங்கள் மூலம் டிஜிட்டல் பில்கள் மட்டுமே வழங்கப்படும். கோயில் கடை ஒப்பந்ததாரர்கள் மற்றும் பார்க்கிங் கட்டணங்களில் நிலவும் முறைகேடுகளைத் தடுக்க இந்த டிஜிட்டல் பில்லிங் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில் முடி காணிக்கை ஒப்பந்தங்களில் தினமும் சேகரிக்கப்படும் முடியின் அளவு மற்றும் தரத்தைக் கண்காணிக்கப் புதிய கண்காணிப்பு அமைப்பும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.