Posted in

ஒரே படகில் முத்தமிடும் நிலையில் டிரம்ப் – புடின்? இணையத்தில் தீயாகப் பரவும் வீடியோ!

நெதர்லாந்து தலைநகர் அம்ஸ்டர்டாமில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற ‘வேர்ல்ட்பிரைட்’ (WorldPride 2026) நீர் வழிக் கால்வாய் பேரணியின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் பாரம்பரிய டச்சு ஆடைகளில் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிடுவது போன்ற ராட்சதக் காற்று பலூன் உருவங்கள் (Inflatable Likenesses) படகில் உலா வந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றுக்கணக்கான அலங்கரிக்கப்பட்ட படகுகள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த வண்ணமயமான கொண்டாட்டத்தில், ஒரு குறிப்பிட்ட படகில் அமைக்கப்பட்டிருந்த இந்த டிரம்ப் – புடின் உருவ ஜோடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பாரம்பரிய நெதர்லாந்து பொம்மைகளின் பாணியில் நீலம் மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து, கைகளில் துலிப் (Tulip) மலர்களை ஏந்தியவாறு இரு உலகத் தலைவர்களும் முத்தமிடுவதற்கு முனைவது போல் வடிவமைக்கப்பட்டிருந்த இந்தச் சிலை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படகையும் உருவத்தையும் உருவாக்கிய கலைக்குழுவினர் தங்களது இணையதளத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளனர். “எங்களது நோக்கம் உலகத் தலைவர்களைக் கேலி செய்வதோ அல்லது சர்ச்சையை உருவாக்குவதோ அல்ல; மாறாக அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் தலைவர்களையும் ஒரு கணம் நிறுத்தி, அன்பு மற்றும் ஒற்றுமையின் மனிதநேயக் பார்வையை உலகிற்கு வெளிப்படுத்துவதே ஆகும்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற பேரணியில் நடந்த வன்முறைத் தாக்குதலின் சுவடுகள் முழுமையாக மறையாத சூழலில், பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நடைபெற்ற இந்த அம்ஸ்டர்டாம் பிரைட் பேரணியில் இடம்பிடித்த இந்த வினோதமான அரசியல் கலைப் படைப்பு, சர்வதேச அளவில் பெரும் விவாதத்தையும் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான பகிர்வுகளையும் பெற்று வருகிறது.