தமிழ்நாட்டில் காலியான டாஸ்மாக் மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாகச் சென்னை, அம்பத்தூர், நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. திரும்பப் பெறப்படும் பாட்டில்களைச் சேமித்து வைக்கக் சில்லறை விற்பனை கடைகளில் போதுமான இடம் இல்லை என்றும், கூடுதல் வேலைப்பளுவைக் கையாள முடியாது என்றும் ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
திட்டத்தின் கீழ் பாட்டில்களைத் திரும்பப் பெறும்போது பலமுறை ஸ்கேன் செய்ய வேண்டிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர். பாட்டில்களைச் சேகரிக்கும் பணிக்குத் தனியாரைப் பணியமர்த்த வேண்டும் அல்லது அனைத்துக் கடைகளிலும் தானியங்கி எந்திரங்களை நிறுவ வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் இத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.
திடீரென டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சில பகுதிகளில் திறந்திருந்த கடைகளில் அதிக அளவில் கூட்டம் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுப் பரபரப்பு நிலவியது. நிலைமையைக் கட்டுப்படுத்தவும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தற்போது டாஸ்மாக் பணிமனைகள் மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் முன்பாக ஊழியர்கள் தங்களது முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
டாஸ்மாக் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் எனப் போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.