தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மாநில இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய்யின் தனிப்பட்ட குடும்ப விவகாரம் குறித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றைக் குறிப்பிட்டு, “மனைவி தன் கணவரைத் தேடி அலைகிறார்” என்ற பாணியில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இரட்டை அர்த்தப் பேச்சுக்கு தவெக மற்றும் பிற எதிர்க்கட்சிகள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
பொதுவெளியிலும் அரசியல் மேடைகளிலும் பெண்களின் அந்தரங்க உணர்வுகளையும், தனிநபர் குடும்ப விவகாரங்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது பெண் கண்ணியத்திற்கு முற்றிலும் எதிரானது எனத் தவெக மகளிர் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி புதுடெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் (NCW) அதிகாரப்பூர்வமாகப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் கொள்கை ரீதியான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், முதலமைச்சரின் தனிப்பட்ட வாழக்கையைக் குறிவைத்து திமுக தலைவர்கள் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்து வருவதாகத் தவெக நிர்வாகிகள் சாடியுள்ளனர். மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி குறித்துப் பேசுவதை விடுத்து, இத்தகைய தனிநபர் தாக்குதல்களில் எதிர்க்கட்சித் தலைவர் ஈடுபடுவது அவரது பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் செயல் எனப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஏற்கனவே இரு கட்சிகளுக்கும் இடையே சட்டப்பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணையத்திற்குச் சென்றுள்ள இந்தப் புகார் திமுகவிற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் உதயநிதி ஸ்டாலினுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் பட்சத்தில், தமிழக அரசியல் களத்தில் தவெக-திமுக இடையேயான மோதல் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.