தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் நிதி வசூல் செய்து மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், தமிழக முன்னாள் பள்ளிப் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல் அலுவலகத்தில் ஆஜரானார். கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அவரது வீடு உட்பட 9 இடங்களில் சிசிபி போலீஸார் சோதனையிட்டு ஆவணங்களைக் கைப்பற்றியிருந்த நிலையில், சம்மனின் அடிப்படையில் வழக்கறிஞர்களுடன் ஆஜரான அவரிடம் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணை நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷ், “காவல்துறை தரப்பில் என்னிடம் வரிசையாக மொத்தம் 246 கேள்விகள் கேட்கப்பட்டன, அவற்றிற்குப் பொறுமையாகவும் தெளிவாகவும் பதிலளித்துள்ளேன். மீதமுள்ள கேள்விகளை அடுத்த வாரம் கேட்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர், அவர்கள் அழைக்கும் எந்தத் தேதியிலும் ஆஜராகத் தயார்” எனத் தெரிவித்தார். அதேவேளையில், இவ்வழக்கில் கைதாகியுள்ள அரசகுமார் மற்றும் தலைமறைவாக உள்ள முத்துக்குமார் ஆகியோர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அவர்கள் என்னிடம் பணம் கொடுத்தது குறித்து என்னிடம் எதுவும் பேசியதில்லை, இது விசாரணையில் உள்ள விஷயம்” எனக்கூறி அவரது வழக்கறிஞர்கள் அவரை அழைத்துச் சென்றனர்.
இதனிடையே, இவ்வழக்கில் தொட தொடர்புடைய சுரேஷ் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவும், அதனைத் தொடர்ந்து அவருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் ஆடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “தனியார் பள்ளிகளிடம் இருந்து அரசகுமார் மற்றும் முத்துக்குமார் சேர்ந்து ரூ.420 கோடி வசூலித்து அன்பில் மகேஷ் குடும்பத்தினரிடம் கொடுத்தனர், இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளதால் என்னை அமைச்சரின் ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் கொலை மிரட்டல் விடுக்கிறார்” என சுரேஷ் அந்த வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் பெறப்பட்ட பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி கணக்குகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை நடப்பதற்கு முந்தைய நாள் இரவே தகவல் கசிந்தது எவ்வாறு என்பது குறித்தும் உயர் காவல்துறை அதிகாரிகள் தனியாக விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.