புதுடெல்லி: தாய்லாந்தின் பூகெட்டிலிருந்து டெல்லி நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், நடுவானில் திடீரென ஏற்பட்ட கடும் காற்றுக்கொந்தளிப்பு (Turbulence) காரணமாக 300 அடி உயரத்திற்கு மேலிருந்து சட்டென்று கீழே சரிந்து விழுந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் மரண பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பாராத விபத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 14 பேர் காயமடைந்துள்ள நிலையில், விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
பூகெட்டில் இருந்து 134 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா ஏஐ 2379 (Air India AI 2379) ஏர்பஸ் ஏ320 விமானம், வழக்கமான உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெரும்பாலான பயணிகள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், திடீரென விமானம் பலமாகக் குலுங்கி, பக்கவாட்டில் சாய்ந்து 300 அடி உயரத்திற்கு அதிவேகமாகக் கீழே இறங்கியது. இதனால் இருக்கை வார்ப் பட்டையை (Seat Belt) அணியாத பயணிகள் பலர் தங்கள் இருக்கையிலிருந்து தூக்கி வீசப்பட்டு, விமானத்தின் மேற்கூரையில் மோதி தலை, கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் காயமடைந்தனர்.
விமானத்தில் திடீர் பதற்றமும் அலறல் சத்தமும் எழுந்த நிலையில், விமானிகள் நிலைமையைக் திறம்படக் கட்டுப்படுத்தி விமானத்தைச் சீரான உயரத்திற்கு கொண்டு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி விமான நிலையத்திற்கு அவசரச் செய்தி அனுப்பப்பட்டு, மருத்துவக் குழுவினரும் ஆம்புலன்ஸ்களும் தயாராக வைக்கப்பட்டன. காலை 11 மணி அளவில் விமானம் டெல்லியில் பத்திரமாகத் தரையிறங்கியதும், காயமடைந்த 10 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஏர் இந்தியா நிர்வாகம், விமானப் பயணத்தின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காற்றுக்கொந்தளிப்பே இந்த உயர மாற்றத்திற்கு காரணம் எனக் கூறியுள்ளது. பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பே முதன்மையானது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் (DGCA) இந்த ஆபத்தான சம்பவம் குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.