வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல விண்வெளி நிறுவனமான எலான் மாஸ்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டின் மேல் பகுதி, நிலவின் மேற்பரப்பில் மணிக்கு 5,400 மைல் (சுமார் 8,690 கி.மீ) அதிவேகத்தில் பலத்த சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 4,000 கிலோ எடையும் பள்ளிப் பேருந்து அளவும் கொண்ட இந்த ராக்கெட் பாகம் மோதியதன் காரணமாக, நிலவில் 20 முதல் 30 மீட்டர் அகலத்திற்குப் புதிய பள்ளம் (Crater) உருவாகியுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிலவுக்கான ஆய்வு விண்கலங்களை ஏந்திச் சென்ற பால்கன் 9 ராக்கெட்டின் இரண்டாவது பகுதி, அதன் பணியை முடித்த பிறகு விண்வெளியிலேயே விடப்பட்டது. விண்வெளி விதிமுறைகளின்படி பூமியின் வளிமண்டலத்திற்குள் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டிய இந்த ராக்கெட் பாகம், கட்டுப்பாட்டை இழந்து விண்வெளிப் பாதையில் மிதந்து கொண்டிருந்தது. சூரியனின் ஈர்ப்பு விசை மற்றும் காந்தப் புல மாற்றங்கள் காரணமாக இதன் திசைமாறி, நிலவை நோக்கி நகரத் தொடங்கியதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
நிலவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ‘ஐன்ஸ்டீன் பள்ளம்’ (Einstein Crater) அருகே இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் 3 டன் டி.என்.டி (TNT) வெடிபொருட்கள் வெடிப்பதற்குச் சமமான ஆற்றலுடன் இந்த மோதல் நிகழ்ந்ததால், நிலவின் மேற்பரப்பிலிருந்து பெருமளவில் தூசிகளும் பாறைத் துகள்களும் விண்வெளியில் எழும்பிச் சிதறியுள்ளன. இந்த விபத்தினால் பூமிக்கு எவ்விதப் பாதிப்பும் அல்லது ஆபத்தும் இல்லை என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்து இல்லை என்றாலும், செயற்கை விண்வெளிப் பொருட்கள் அதிவேகத்தில் நிலவில் மோதும் போது ஏற்படும் அதிர்வுகள் மற்றும் தூசிகளின் தன்மையை ஆய்வு செய்ய இந்தச் சம்பவம் விஞ்ஞானிகளுக்கு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. நாசாவின் ‘லூனார் ரீகானைசன்ஸ் ஆர்பிட்டர்’ (LRO) செயற்கைக்கோள் மூலம் இந்த மோதலால் உருவான புதிய பள்ளத்தையும் நிலவின் மேற்பரப்பு மாற்றங்களையும் நிலப்பரப்பு புகைப்படங்கள் மூலம் விண்வெளி ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.