செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக மதுராந்தகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தவெக தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில், பூத் கமிட்டி (பாக முகவர்கள்) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெகவின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கலந்துகொண்டு தொகுதி பிரசாரம் மற்றும் பூத் வாரியான செயல்பாடுகள் குறித்து ஆலோசித்தனர்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஆதவ் அர்ஜூனா, தவெக தலைவர் விஜய் கொள்கை ரீதியாக எடுத்த முடிவுகள் குறித்துப் பேசினார். தவெக தலைவர் விஜய் நினைத்திருந்தால், அதிமுகவுடன் மிக எளிதாகக் கூட்டணி அமைத்து அவர்களுக்கு 15 அமைச்சர் பதவிகளைக் கூட வழங்கி இருக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், விஜய் பதவிக்காகவோ சுயநலத்திற்காகவோ அரசியலுக்கு வரவில்லை எனத் தெரிவித்தார். சமூக நீதிக் கொள்கையில் அவர் உறுதியாக நின்றதன் காரணத்தினாலேயே இந்தக் கூட்டணி நிலைப்பாடுகள் அமைந்ததாக விளாக்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் அரசியல் அணுகுமுறையையும் கடுமையாக விமர்சித்தார். 75 ஆண்டுகள் பாரம்பரியமிக்க திமுக, தவெகவின் அரசியல் வளர்ச்சியையும் வெற்றியையும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதாகக் கூறினார். அத்துடன், கீழ்மட்டத்தில் இருந்து உழைத்து வந்தவர்களுக்கே அரசியல் தகுதி உருவாகும் என்றும், வெறும் வாரிசு அரசியலால் மட்டுமே தகுதி வந்துவிடாது என்றும் மறைமுகமாக திமுக தலைமையைக் கடுமையாகச் சாடினார்.
மதுராந்தகம் கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா ஆற்றிய இந்தப் பேச்சு, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணி சாத்தியக்கூறுகள் மற்றும் சமூக நீதி குறித்த தவெகவின் இந்தத் துணிச்சலான கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பரவலான கவனிப்பைப் பெற்று வருகின்றன.