அமெரிக்காவில் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் (Jeffrey Epstein) ‘ஸோரோ ரேஞ்ச்’ (Zorro Ranch) பண்ணை இல்லத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை முழுமையாக வெளியிடாமல் தாமதிப்பதாகக் கூறி, ட்ரம்ப் நிர்வாகத்தின் நீதித்துறை மற்றும் பதில் அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் (Todd Blanche) மீது நியூ மெக்சிகோ மாநில அரசு கூட்டாட்சி நீதிமன்றத்தில் அதிரடியாக வழக்குத் தொடுத்துள்ளது.
நியூ மெக்சிகோ மாநிலத்தின் அட்டர்னி ஜெனரல் ராவுல் டோரஸ் (Raúl Torrez) தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், எப்ஸ்டீனுக்குச் சொந்தமான 10,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஸோரோ ரேஞ்ச் பண்ணையில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல்கள் மற்றும் மனித கடத்தல்கள் குறித்து மாநில அரசு தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், இது தொடர்பான முழுமையான, திருத்தப்படாத (unredacted) விசாரணை ஆவணங்களை வழங்கக் கோரி விடுக்கப்பட்ட பல கோரிக்கைகளை அமெரிக்க நீதித்துறை திட்டமிட்டுப் புறக்கணித்துத் ‘தடைக்கற்களை’ (stonewalling) ஏற்படுத்தி வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்ட இந்த விசாரணையில், எப்ஸ்டீனின் பண்ணை இல்லத்திற்கு வந்து சென்ற முக்கிய நபர்கள், ஊழியர்கள் மற்றும் சாட்சிகளை அடையாளம் காண மத்திய அரசின் ஆவணங்கள் மிக அவசியமானவை என நியூ மெக்சிகோ அரசு வலியுறுத்துகிறது. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமை பாதுகாப்புச் சட்டங்களைச் சுட்டிக்காட்டி முழுமையான ஆவணங்களை வழங்க மத்திய நீதித்துறை மறுத்து வருகிறது. மத்திய அரசு ஒத்துழைக்கத் தவறினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்படும் என மாநில அரசு தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.
எப்ஸ்டீனின் நியூயார்க் மற்றும் கரீபியன் தீவு சொத்துக்கள் சோதனையிடப்பட்ட போதிலும், இந்தச் சர்ச்சைக்குரிய ஸோரோ ரேஞ்ச் பண்ணை இல்லத்தில் முறையான மத்திய சோதனைகள் எதுவும் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது. தற்போது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக நியூ மெக்சிகோ அரசு எடுத்துள்ள இந்த அதிரடி சட்ட நடவடிக்கை, அமெரிக்க அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் எப்ஸ்டீன் ஆவணங்கள் சார்ந்த விவாதத்தை மீண்டும் உலகளவில் சூடேற்றியுள்ளது.