Posted in

ஒருத்தரையும் விட்ராதீங்க: தொழிலதிபர் வீரமணி போக்சோ வழக்கில் முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

பிரபல ஜெம் கிரானைட் நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான 84 வயதான ஆர். வீரமணி மீதான போக்சோ (POCSO) வழக்கு விசாரணை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் மற்றும் இதில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபருக்குத் துணையாகச் செயல்பட்ட இடைத்தரகர்கள் குறித்துக் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், தமிழ்நாடு முதல்வர் விஜய், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் வழக்கு தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை நடத்தி, “குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரையும் தப்பவிடக் கூடாது” எனக் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு வெளியான ஒரு வீடியோவின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த போக்சோ வழக்கின் பின்னணியில், ஏழைச் சிறுமிகள் பல ஆண்டுகள் திட்டமிட்டு பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டது மத்திய குற்றப்பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கை முடிக்கக் காவல்துறை முயன்ற போதிலும், போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதனை நிராகரித்து மறுவிசாரணைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்தே வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகளான சாந்தி, மகேந்திர சிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இந்த வழக்கில் மேலும் பல பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் அடையாளம் காணப்பட்டு, நீதிமன்றத்தில் அவர்களின் ரகசிய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துள்ள இந்த பாலியல் முறைகேடு பின்னணியில் மிகப்பெரிய செல்வாக்கு படைத்த பலர் பின்னணியில் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதால், முதல்வர் விஜய்யின் இந்த அதிரடி உத்தரவு காவல் துறைக்குக் கூடுதல் அதிகாரத்தையும் அழுத்தத்தையும் வழங்கியுள்ளது.

இந்த வழக்கு விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவால் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைப்பதையும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உரிய மறுவாழ்வு மற்றும் சட்டப்பூர்வ நிவாரணங்களை வழங்குவதையும் அரசு உறுதி செய்யும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.