தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, விருதுநகர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாளாக அமைந்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அன்றைய தினம் விருதுநகர் மாவட்டம் முழுவதற்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெறும் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் ஆகஸ்ட் 14 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 14 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை, ஆகஸ்ட் 15 சனிக்கிழமை சுதந்திர தின அரசு பொது விடுமுறை மற்றும் ஆகஸ்ட் 16 ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையாக இணைந்து வந்துள்ளது. இந்த விடுமுறையானது பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் பொருந்தும் என இரு மாவட்ட நிர்வாகங்களும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன.
அதேவேளையில், உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிற வேலைநாட்கள் பின்னறிவிக்கப்படும் என்றும், அத்தியாவசிய பணிகளுக்காகக் கருவூலங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆடிப்பூரத் திருவிழா மற்றும் சுதந்திர தின விழாவை முன்னிட்டுத் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால், பொதுமக்கள் பண்டிகையைக் கொண்டாடவும் சொந்த ஊர்களுக்குச் செல்லவும் திட்டமிட்டு வருகின்றனர்.