உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து ஆக்கிரமித்த விவகாரத்தில், சிறப்புத் தனிப்படைப் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை சமஸ்தான ராஜ்குமாரர் தட்சிணாமூர்த்தி துரைராஜா – துரைராணி அறக்கட்டளை மூலம் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர்கோவில் அறக்கட்டளை நற்காரியங்களுக்காக வழங்கப்பட்ட 1.79 ஏக்கர் நிலத்தை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் நபர்கள் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றம் செய்து முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகக் கோவில் இணை ஆணையர் செல்லதுரை அளித்த புகாரின் பேரில் 19 பேர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நில மோசடிக்கு முக்கிய மூளையாகச் செயல்பட்ட இளையராஜா மற்றும் போலி ஆவணம் மூலம் பட்டா பெற்ற ராஜ்குமார் ஆகிய இருவரைப் போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்த நிலையில், மதுரை வடக்கின் அன்றைய தாசில்தாராகவும் தற்போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும் பணியாற்றி வந்த துணை ஆட்சியர் அன்பழகனும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய 18-வது குற்றவாளியான திண்டுக்கல்லைச் சேர்ந்த காளிகுமார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இடைக்காலத் தடையையும் மீறி, சார்பதிவாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் துணையோடு பொது அதிகாரப் பத்திரம் (Power of Attorney) மற்றும் அடமானப் பத்திரங்களைப் பதிவு செய்து இந்த பிரம்மாண்ட நில அபகரிப்பு அரங்கேற்றப்பட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கோவில் சொத்துக்களை மீட்டெடுக்க அறநிலையத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சில முக்கிய அதிகாரிகளிடம் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.