Posted in

ஐடிஐ படித்தால் ஜப்பானில் வேலை! – அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னிலையில் கையெழுத்தான வரலாற்று ஒப்பந்தம்!

தமிழ்நாட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயின்ற இளைஞர்களுக்குச் சர்வதேச அளவில் வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில், ஜப்பானின் முன்னணி நிறுவனத்துடன் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் முறைப்படி மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் ஜப்பானின் எஹிமே நிசான் (Ehime Nissan) நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம், அரசு ஐடிஐ-களில் ஆட்டோமொபைல் சார்ந்த தொழிற்பிரிவுகளில் பயின்ற மாணவர்களுக்குச் சிறப்புத் தொழில்நுட்பப் பயிற்சியும், 6 மாத கால ஜப்பானிய மொழிப் பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் அவர்கள் ஜப்பானில் உள்ள எஹிமே நிசான் நிறுவனத்தில் ‘ஆட்டோமொபைல் சர்வீஸ் டெக்னீஷியன்’ ஆகப் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்தத் திட்டத்திற்கான விசா கட்டணம், மருத்துவப் பரிசோதனைச் செலவுகள் மற்றும் ஆவணத் தயாரிப்புக் கட்டணங்கள் என அனைத்துச் செலவுகளையும் ஜப்பான் நிறுவனமே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், இளைஞர்கள் எவ்வித நிதியமைப்பின் உதவியுமின்றி, சொந்தச் செலவின்றி நேரடியாக வெளிநாட்டில் வேலை வாய்ப்பைப் பெற இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

தற்போது தமிழ்நாட்டில் 132 அரசு ஐடிஐ-களும், 277 தனியார் ஐடிஐ-களும் இயங்கி வரும் நிலையில், மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாரம்பரியத் தொழிற்பிரிவுகள் மட்டுமின்றி, ரோபோடிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக் வாகனப் பராமரிப்பு போன்ற நவீன தொழில் நுட்பப் பிரிவுகளிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதுடன், சென்ற ஆண்டில் 95% மாணவர்களுக்கு உள்நாட்டிலேயே வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.