Posted in

திருத்தணி கோயிலில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் கார் தடுத்து நிறுத்தம்!

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழாவை ஒட்டி சாமி தரிசனம் செய்ய வந்த இந்து சமய அறநிலையத் துறை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.கே. சேகர்பாபுவின் காரைக் காவல்துறையினர் அடிவாரத்திலேயே தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி கிருத்திகை திருவிழாவின் போது குடும்பத்துடன் சென்று திருத்தணி முருகனை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள பி.கே. சேகர்பாபு, இந்த ஆண்டும் தனது குடும்பத்துடன் இரு சொகுசு கார்களில் மலைக்கோயிலை நோக்கிப் புறப்பட்டார். இருப்பினும், மலைக்கோயில் அடிவாரத்திலேயே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், முன்னாள் அமைச்சரின் கார்களை மேலே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.

சிறப்பு அனுமதி பெறாத கார்களை மலைப் பாதையில் அனுமதித்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக் கூறி காவல்துறையினர் காரை வழிமறித்ததால், அங்குச் சூழல் சூடானது. இதைத் தொடர்ந்து, சேகர்பாபுவை வரவேற்க வந்த கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சேகர்பாபு முன்னிலையிலேயே சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாகக் கடும் வாக்குவாதம் நிலவியது.

பின்னர் இது குறித்துத் திருக்கோயில் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் காவல் துறை உயரதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் தலையீட்டிற்குப் பிறகே சேகர்பாபுவின் கார் மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிய சேகர்பாபு, தனது கார் மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.