Posted in

சிறையில் அடைக்கப்பட்ட முக்கிய வழக்கறிஞர் திடீர் உயிரிழப்பு!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான மடத்து நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூத்த வழக்கறிஞர் எஸ். அன்வர்தீன் (66) திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் அமைந்த தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தை, சில நபர்கள் நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி போலி ஆவணங்கள் தயாரித்து வெறும் ரூ.2 கோடிக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாகச் சிபிசிஐடி (CB-CID) போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நில மோசடிக்குத் துணைபோனதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கறிஞர் அன்வர்தீன் உள்ளிட்ட 11 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீனுக்குத் திடீரெனக் கடுமையான நெஞ்சுவலி மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே அவரைப் பரிசோதித்த சிறைத்துறை அதிகாரிகள், சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டையே உலுக்கிய ரூ.100 கோடி கோவில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளி ஒருவர் சிறையிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. அன்வர்தீனின் உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்துச் சிறைத்துறை அதிகாரிகளும் சிபிசிஐடி போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.