Posted in

தவெகவில் இணைந்த அதிமுக தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகள்!  – முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அதிமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்குப் புதிய கட்சிப் பொறுப்புகளை வழங்கி, தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார். புதிய நிர்வாகிகள் இணைந்ததைத் தொடர்ந்து கட்சி அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர் பொறுப்பும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்குக் கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் மற்றும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையாவும், துணைப் பொதுச்செயலாளர்களாக மதுராந்தகம் முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் நாங்குநேரி ராஜகோபால் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியில் இணைந்த உடனேயே இவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்படாததற்கு, உட்கட்சி விவாதங்களும் மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைகளுமே முக்கியக் காரணமாக அமைந்தன. ஏற்கனவே புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் நிர்வாகிகளாக இருந்தவர்களின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்படாத வகையில் இழுபறி நீடித்து வந்தது. பின்னர், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நடத்திய விரிவான பேச்சுவார்த்தைக்குப் பிறகே இந்த சமரச முடிவுகள் எட்டப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

தவெக ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் மக்கள் தன்னிச்சையாக அளித்து வரும் ஆதரவை சுட்டிக்காட்டியுள்ள கட்சித் தலைமை, புதிய நிர்வாகிகளின் நியமனம் மூலம் மாவட்ட அளவில் களப்பணிகள் மேலும் வேகமெடுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதிமுகவின் முக்கிய விக்கெட்டுகள் தவெகவில் பொறுப்பேற்றுள்ள இந்தச் சம்பவம், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் மீண்டும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.