Posted in

சிறையில் முக்கிய குற்றவாளி திடீர் மரணம்.. சிபிஐ விசாரணைக்கு எழும் கோரிக்கை

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான வழக்கறிஞர் அன்வர்தீன்  மதுரை மத்திய சிறையில் திடீரென உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியல் களத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் சிபிசிஐடி  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது வழியிலேயே உயிரிழந்ததாகச் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட கொடைக்கானல் இடைநீக்கம் செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனும் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது சந்தேக அலைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த வழக்கின் பின்னணியில் உள்ள பல முக்கிய புள்ளிகள் மற்றும் அதிகாரிகளின் பெயர்களை அன்வர்தீன் வெளிக்கொணர இருந்த நிலையில், அவரது இந்தத் திடீர் மரணம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகக் கூறி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வழக்கு விசாரணையைச் சிபிஐ-க்கு (CBI) மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

விசாரணைக் கைதியின் மரணத்தைத் தொடர்ந்து, நீதிபதி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை மற்றும் முழு உடல் சிடி ஸ்கேன் (CT Scan) சோதனைகள் செய்யப்பட்டு சட்டப்பூர்வ விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவில் நிலத்தைச் சுருட்டிய ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் அடுத்தடுத்து அரங்கேறும் இந்த மர்மச் சம்பவங்கள், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கைப் போல மாறுமோ என்ற அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.