காசாவில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ‘போர்டு ஆஃப் பீஸ்’ (Board of Peace) அமைப்பு உருவாக்கியுள்ள இரண்டாம் கட்டப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்த முன்வந்துள்ள ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலியப் படைகளைக் காசாவிலிருந்து உடனடியாக வெளியேற்ற அமெரிக்க நிர்வாகம் கடுமையான அழுத்தம் தர வேண்டும் என அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது. தங்கள் ஆயுதங்களை அமைக்கப்பட்ட புதிய பாலஸ்தீன நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கத் தயார் என உறுதியளித்துள்ள ஹமாஸ், அதற்கேற்ப இஸ்ரேலும் தாக்குதல்களை நிறுத்தி படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
இருப்பினும், ஹமாஸின் இந்தத் திடீர் அமைதி ஒப்பந்த ஏற்பை இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் மற்றும் உளவு அமைப்பான ஷின் பெட் (Shin Bet) கடும் சந்தேகத்துடன் எதிர்நோக்குகின்றன. அமைதி ஒப்பந்தத்தை ஒரு ‘வியூகப் பொறி’ (Strategic Ambush) மற்றும் ‘ராஜதந்திர அக்டோபர் 7’ என வர்ணித்துள்ள இஸ்ரேலிய அதிகாரிகள், வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாகத் தங்கள் மீது ராணுவ நடவடிக்கை தொடர்வதைத் தடுப்பதற்கும், கால அவகாசம் வாங்குவதற்குமே ஹமாஸ் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தி வருகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களை முழுமையாகக் கைவிட்ட பிறகே காசாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக வெளியேறும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஹமாஸ் ஆயுதங்களை முற்றிலுமாகக் களையும் வரை தற்காப்புத் தாக்குதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப்படாது என்றும், எல்லைப் பகுதிகளில் சர்வதேசப் படைகள் நிலைநிறுத்தப்படுவது குறித்த திருத்தங்களை அமெரிக்காவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் நடைபெற்று வரும் இந்த அமைதி ஒப்பந்த நடவடிக்கைகள், காசா மோதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இருதரப்புக்கும் இடையே நிலவும் பரஸ்பர நம்பிக்கையின்மை மற்றும் நிபந்தனைகள் காரணமாக ஒப்பந்தம் முழுமையாக அமலாவதில் பல சிக்கல்கள் நீடித்து வருகின்றன.