மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், சவூதி அரேபியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான ‘சவூதி அரம்கோ’ (Saudi Aramco) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதும், செங்கடல் பகுதியில் உள்ள முக்கிய அமைந்த மோகா (Mocha) துறைமுகத்தின் மீதும் ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஒரே நேரத்தில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
சவூதி அரேபியாவின் ஜாசன் (Jazan) நகரில் அமைந்துள்ள அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் குறிவைத்து துல்லியமான ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதி அமைப்பின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரி (Yahya Saree) உறுதிப்படுத்தியுள்ளார். ஏமனின் வான்வெளியில் சவூதி ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்ததற்குப் பதிலடியாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறிய அவர், தாக்குதலின் இலக்குகள் சரியாக எட்டப்பட்டதாகவும் தெரிவித்தார். முன்னதாக, அரம்கோ வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் உடனடியாகக் கட்டுப்படுத்தியதாகவும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் சவூதி ஆற்றல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஏமன் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான செங்கடல் துறைமுகமான ‘மோகா’ நகரின் மீதும் ஹூதிகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்மூடித்தனமான தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர். இதில் துறைமுகத்தின் கட்டிடங்கள், கப்பல் இறங்குதளங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்குகள் கடுமையாகச் சேதமடைந்தன. இத்தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட சிலர் உயிரிழந்ததுடன், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2022-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கைக்குப் பிறகு, தற்போது ஹூதி அமைப்பினர் நடத்தி வரும் இந்தத் தொடர் தாக்குதல்கள் ஏமனில் மீண்டும் உள்நாட்டுப் போர் தீவிரமடையும் அபாயத்தை உருவாக்கியுள்ளன. ஹார்மூஸ் நீரிணை வழித்தடத்தை ஈரான் முடக்கி வைத்துள்ள சூழலில், செங்கடல் பகுதியில் சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து மீது ஹூதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்திலும் பெரும் முடக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.