உத்திரப்பிரதேச மாநிலம் Greater Noida-வில் நள்ளிரவில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எாிந்து சாம்பலான கோர விபத்தில், குழந்தைகள் உட்படக் குறைந்தபட்சம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அந்தப் பேருந்து, யமுனா விரைவுச்சாலை (Yamuna Expressway) வழியாக நொய்டா பகுதியைக் கடந்து சென்றபோது இந்த எதிர்பாராத விபத்து நேரிட்டுள்ளது. பேருந்தின் பின்புறம் எஞ்சின் பகுதியில் இருந்து திடீரெனப் புகை மூட்டம் கிளம்பி, சில வினாடிகளிலேயே தீப் பிழம்பு பேருந்து முழுவதும் அதிவேகமாகப் பரவியது.
நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், கதவு மற்றும் ஜன்னல்கள் உடனடியாகத் திறக்க முடியாததால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்துக்குள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுப்படுத்திய போதிலும், 9 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மற்ற பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் எஞ்சினில் ஏற்பட்ட மின்சாரக் குறுகிய சுற்று (Short Circuit) அல்லது ஏசி கம்ப்ரஸர் வெடித்ததே விபத்துக்குக் காரணம் என சந்தேகிக்கப்படும் நிலையில், சம்பவம் குறித்து அம்மாநில அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.