Posted in

பிரிட்டன் கப்பல்களைக் கைப்பற்றுவோம் – ‘நிழற்படை’ டேங்கர்கள் பறிமுதலுக்குப் புடின் விடுத்த பகிரங்க எச்சரிக்கை!

உக்ரைன் போருக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் ரஷ்யாவின் ‘நிழற்படை’ (Shadow Fleet) எண்ணெய் டேங்கர் கப்பல்களைப் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழிமறித்துக் கைப்பற்றி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாகப் பிரிட்டன் மற்றும் மேற்கத்திய நாடுகளின் வர்த்தகக் கப்பல்களை ரஷ்யா பறிமுதல் செய்யும் என்று அதிபர் விளாடிமிர் புடின் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பசிபிக் கடற்படை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது பேசிய அதிபர் புடின், சர்வதேசக் கடல்சார் சட்டங்களை மீறி ரஷ்ய நிறுவனங்களின் வர்த்தகக் கப்பல்களை மேற்கத்திய நாடுகள் முடக்கி வருவதாகவும், கைப்பற்றப்பட்ட சொத்துக்களை விற்க முயல்வது கடற்கொள்ளைக்கு (Piracy) நிகரானது என்றும் கடுமையாகச் சாடினார். மேலும், தங்களது கப்பல்கள் முடக்கப்படும் அதே கடற்பகுதியில் மட்டுமல்லாமல், பசிபிக் பெருங்கடல் உட்படத் தங்களுக்குச் சாதகமான உலகத்தின் எந்தவொரு பகுதியிலும் பதிலடி நடவடிக்கையாக மேலைநாடுகளின் கப்பல்களைக் கைப்பற்ற ரஷ்ய ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சமீபத்தில் ஆங்கிலக் கால்வாய் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் பயணித்த ரஷ்யாவின் ‘ஸ்மைர்டோஸ்’ (Smyrtos) உள்ளிட்ட பல நிழற்படை எண்ணெய் டேங்கர் கப்பல்களைப் பிரிட்டனின் ராயல் மெரைன் கமாண்டோக்கள் மற்றும் பிரான்ஸ் கடற்படையினர் அதிரடியாகச் சுற்றிவளைத்துக் கைப்பற்றினர். உக்ரைன் மீதான படையெடுப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சர்வதேச தடைகளை மீறி ரஷ்யா எண்ணெய் ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தும் 700-க்கும் மேற்பட்ட நிழற்படைக் கப்பல்கள் மீது மேற்கத்திய நாடுகள் இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் கொண்டு வந்த சட்டத் திருத்தத்தின் படி, கைப்பற்றப்பட்ட ரஷ்யக் கப்பல்களில் உள்ள எண்ணெய்யை ஏலம் விட்டு விற்பனை செய்ய உறுப்பு நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்துள்ள ரஷ்யா, உலகின் முக்கியக் கடல்சார் வணிகப் பாதைகளில் மேற்கத்தியக் கப்பல்களைக் குறிவைக்கத் திட்டமிட்டுள்ளதால், சர்வதேசக் கடல் பகுதியில் நேட்டோ படைகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நேரடி இராணுவ மோதல் உருவாகும் அபாயம் அதிகரித்துள்ளதாகப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.