பிரிட்டனில் இணையவழி நியா-நாஜி (Neo-Nazi) தீவிரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு, நாட்டின் மிகவும் இளவயது பயங்கரவாத சந்தேக நபராக மாற்றப்பட்ட 14 வயதுச் சிறுமி ரியானன் ரூட் (Rhianan Rudd) தொடர்பான வழக்கு, உலகளவில் இணையப் பாதுகாப்பு குறித்த பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் தீவிரவாதக் குழுக்களின் வலையில் வீழ்ந்த அச்சிறுமி, தனது நெற்றியில் ஸ்வஸ்திகா முத்திரையைக் கத்தியால் செதுக்கிக் கொள்ளும் அளவுக்குத் தீவிரவாதிகளால் தூண்டப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெர்பிஷையர் பகுதியைச் சேர்ந்த ஆட்டிசம் (Autism) குறைபாடுடைய ரியானன் ரூட், கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் தனிமையிலிருந்த போது, அமெரிக்காவைச் சேர்ந்த தீவிர வலதுசாரி நியா-நாஜி அமைப்பினருடன் இணையவழியில் தொடர்பில் இருந்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் குக் என்ற பயங்கரவாதியால் மூளைச்சலவை செய்யப்பட்ட அச்சிறுமி, வெடிகுண்டு தயாரிக்கும் முறைகளைப் பதிவிறக்கம் செய்ததாகவும், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு, பிரிட்டன் பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படுவதற்கு முன்பாக, அச்சிறுமியின் தாயார் தனது மகள் ஹிட்லரின் தீவிர ரசிகையாக மாறி வருவதாகவும், இனவெறி கருத்துக்களைப் பேசுவதாகவும் பிரிட்டன் அரசின் ‘பிரிவென்ட்’ (Prevent) தீவிரவாத எதிர்ப்பு அமைப்பிடம் புகார் அளித்திருந்தார். இருப்பினும், உரிய நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே அச்சிறுமிக்குத் தீவிரவாதிகளால் கடும் அச்சுறுத்தல்களும் பாலியல் சுரண்டல்களும் ஏற்பட்டுள்ளன. பின்னரே, அச்சிறுமி குற்றவாளி அல்ல; அவர் இணையவழி மூளைச்சலவைக்கும் (Online Grooming) சுரண்டலுக்கும் பலியானவர் என்பது உறுதியாகி, அவர் மீதான வழக்குகள் கைவிடப்பட்டன.
ஆனால், இந்த வழக்குகளால் ஏற்பட்ட தீவிர மன உளைச்சல் மற்றும் சமூகப் புறக்கணிப்பு காரணமாக, காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த அச்சிறுமி ரியானன் ரூட், தனது 16-வது வயதில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து நடைபெற்று வரும் அதிகாரப்பூர்வ மரண விசாரணையில் (Inquest), சிறுமியின் தாய் எமிலி கார்ட்டர் இணையத்தில் சுற்றித்திரியும் நியா-நாஜி நெட்வொர்க்குகள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும், சிறுமிகளைக் குறிவைக்கும் தீவிரவாதிகள் குறித்தும் எச்சரித்துத் தனது ஆழமான வேதனையைப் பதிவு செய்துள்ளார்.