அண்மையில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் படுகொலை செய்ய ஈரான் விரிவான சதித்திட்டம் தீட்டியிருந்ததாகவும், அவர் தங்கியிருந்த ஹோட்டலின் தளம் (Floor) மற்றும் அறை அமைப்புகள் வரை ஈரானிய உளவுத்துறை துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்ததாகவும் அமெரிக்க உளவுத்துறை திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
துருக்கி தலைநகர் அங்காராவில் டிரம்ப் தங்கியிருந்த ஹோட்டலில் அவரைச் சுட்டு வீழ்த்தவும், அவர் பயணிக்கும் விமானத்தின் மீது தோள்மேல் வைத்து இயக்கும் ஏவுகணையைச் (Shoulder-Fired Missile) செலுத்தித் தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்தன. இந்த அச்சுறுத்தல் மிகவும் தீவிரமானது என்பதை உணர்ந்த அமெரிக்க ரகசியச் சேவை (Secret Service) மற்றும் ராணுவ அதிகாரிகள், டிரம்பைப் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்ற அதிரடி ‘திசைதிருப்பும்’ (Decoy Operation) நாடகத்தை அரங்கேற்றினர்.
டிரம்ப் பொதுமக்களின் கேமராக்களுக்கு முன்பாக “பழைய நினைவுகளுக்காக” (For old time’s sake) எனக் கூறி வழக்கமான ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force One) விமானத்தில் ஏறுவது போலக் காட்டப்பட்டது. ஆனால், விமானத்தின் மற்றொரு கதவு வழியாக விமான நிலைய உணவு விநியோகக் கொள்கலன் (Catering Truck) மூலம் ரகசியமாக வெளியில் கொண்டு வரப்பட்ட டிரம்ப், சிறிய ரக C-32A ராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டுப் பத்திரமாகப் பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதேவேளையில் செய்தியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பயணித்த ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் டிரம்பின் போலியான இருப்பிடத்தைக் காட்டப் பயன்படுத்தப்பட்டது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர்ச் சூழல் நிலவி வரும் வேளையில், டிரம்ப் தங்கியிருந்த ஹோட்டலின் துல்லியமான விவரங்கள் ஈரானுக்குக் கிடைத்தது அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினரையே அதிர வைத்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய டிரம்ப், “தனக்கு இதுபோன்ற பல இரகசிய அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன, எனினும் இராணுவ அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படியே தான் விமானத்தை மாற்றிக் கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.