Posted in

குடித்தால் 5000 அபராதம்! – திருமண ஆகாத இளைஞர்களுக்கு அதிரடி தடை விதித்த கிராமப் பஞ்சாயத்து!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள விழுந்தமாவடி மீனவக் கிராமத்தில், மதுப் பழக்கத்தால் இளைஞர்களின் எதிர்காலம் பாழாவதைத் தடுக்கவும் ஊரின் பொது அமைதியைப் பேணவும் ஊர் பஞ்சாயத்து சார்பில் அதிரடி ஊர்க் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. “மதுவை ஒழிப்போம்! மக்களைக் காப்போம்!” என்ற முழக்கத்துடன் பஞ்சாயத்து நிர்வாகம் வைத்துள்ள பிரம்மாண்ட பேனர், தற்போது தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

கிராமப் பஞ்சாயத்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிராமத்தின் நலம் மற்றும் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி இளைஞர்கள் மது அருந்துவது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும் எனக் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணமான ஆண்கள் மது அருந்திவிட்டு வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ தகராறில் ஈடுபட்டுக் பஞ்சாயத்துக்குப் புகார்கள் வந்தால், அவர்களுக்கும் அதே ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ஊருக்குள் விதியை மீறி மது அருந்தும் நபர்கள் குறித்துப் பஞ்சாயத்து தலைவர்களிடம் உரிய ஆதாரங்களுடன் ரகசியமாகப் போட்டுக் கொடுக்கும் நபர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்படும் என்றும் பஞ்சாயத்து நிர்வாகம் சலுகை அறிவித்துள்ளது. பஞ்சாயத்தின் இந்தத் திடீர் கெடுபிடியால், கிராமத்திற்குள் இருக்கும் குடிமகன்கள் மத்தியில் யார் தங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்களோ என்ற அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அமலுக்கு வந்துள்ள இந்த அதிரடிக் கட்டுப்பாடுகளால், விழுந்தமாவடி கிராமத்தில் குடும்பச் சண்டைகளோ, தேவையற்ற வீதி ரகளையோ எதுவுமின்றி அமைதி நிலவுவதாக ஊர் மக்கள் மற்றும் பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மதுப் பழக்கத்திற்கு எதிராக எளிய கிராம மக்கள் எடுத்துள்ள இந்த முன்மாதிரியான நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் மற்றும் இணையவாசிகளிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.