Posted in

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு! – அல்-காய்தா பயங்கரவாதச் சதியைத் தோலுரித்த ஐ.நா அறிக்கை!

நாட்டின் தலைநகரான டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 2025-ம் ஆண்டு நவம்பரில் அரங்கேறி நாட்டையே உலுக்கிய கொடூரமான கார் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு, அல்-காய்தாவின் துணை அமைப்பான ‘இந்திய துணைக்கண்டத்திற்கான அல்-காய்தா’ (AQIS) அமைப்பே காரணம் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் குழு தனது சமீபத்திய அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. 11 பேர் பலியாகிப் பலர் படுகாயமடைந்த இந்தச் தற்கொலைப்படை தாக்குதலின் பின்னணியில் இருந்த சர்வதேசப் பயங்கரவாதத்தின் கொடூரக் கரங்களை ஐ.நா-வின் பகுப்பாய்வு மற்றும் தடைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

தேசிய புலனாய்வு முகமை (NIA) நடத்திய தீவிர விசாரணையில், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் உமர் உன்-நபி என்பவரே காரில் வெடிமருந்துகளைச் சுமந்து வந்து வெடிக்கச் செய்த முதன்மைக் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டார். மேலும், ஏக்யூஐஎஸ் (AQIS) அமைப்போடு தொடர்புடைய ‘அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த்’ (AGuH) அமைப்பைச் சேர்ந்த பலரை என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்து, சுமார் 7,500 பக்கங்களுக்கும் அதிகமான விரிவான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் 38-வது கண்காணிப்பு அறிக்கையின்படி, முன்னதாகச் சிதறிக் கிடந்த ஏக்யூஐஎஸ் அமைப்பு, தற்போது தெற்காசியப் பிராந்தியத்தில் வலிமையான பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்து தப்பிப்பதற்காகப் பெரிய குழுக்களாகச் செயல்படாமல், சிறிய ரகசியச் செல்கள் (Decentralized Small Cells) மூலம் நிதி திரட்டுவது மற்றும் தாக்குதல்களைத் திட்டமிடுவது போன்ற புதிய உத்திகளை இவர்கள் கையாண்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், வங்கதேசத்திலும் தங்களது பயங்கரவாதக் கிளைகளை நிறுவ இந்த அமைப்பு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக ஐ.நா தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, பயங்கரவாத அமைப்புகள் தங்களது தீவிரவாதப் பிரச்சாரங்களை பரப்பவும், ரசாயன ஆயுதத் தயாரிப்பிற்கான வழிகாட்டுதல்களைப் பெறவும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்கள் மற்றும் கிரிப்டோகரன்சிகளை முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாகவும் ஐ.நா சபை எச்சரித்துள்ளது.