Posted in

தவெக நிர்வாகி மீது பாலியல் புகார்.. பெண்களின் பாதுகாப்பு பேச்சு வேடிக்கையானது! – டிடிவி தினகரன் கடும் சாடல்!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் சிலர் மீது அடுத்தடுத்து பாலியல் அத்துமீறல் புகார்கள் எழுந்து வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசும் தவெக அரசின் போக்கு முற்றிலும் வேடிக்கையானது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தத் தவறிய முதல்வர் விஜய், மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதற்கு எவ்விதத் தகுதியும் இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.

தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் தவெக நிர்வாகிகள் மீது பெண் நிர்வாகிகள் மற்றும் இளம்பெண்கள் அளித்த பாலியல் புகார்களைச் சுட்டிக்காட்டியுள்ள டிடிவி தினகரன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான தவெக நிர்வாகிகளையே கட்சித் தலைமை பாதுகாப்பதாகக் குற்றம்சாட்டினார். மேடைக்கு மேடை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் எந்தச் சமரசமும் இல்லை என வீராப்புப் பேசும் முதல்வர் விஜய், தன் சொந்தக் கட்சியினர் அரங்கேற்றும் அநீதிகளுக்கு எப்போது முடிவுரை எழுதப் போகிறார் எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், கரூர் மற்றும் குளித்தலை உள்ளிட்ட இடங்களில் தவெக நிர்வாகிகள் மீது பெண்கள் தொடர்ந்து அளித்து வரும் புகார்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுப் பெண்களைக் குற்றச் சம்பவங்களில் இருந்து பாதுகாப்பதை விட, தவெக நிர்வாகிகளிடமிருந்து பாதுகாக்கவே மாநிலத்தில் தனியாக ஒரு ‘சிறப்பு அதிரடிப்படை’ அமைக்க வேண்டிய அவலநிலை உருவாகிவிட்டதாகத் தனது சமூக வலைதளப் பதிவில் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பெண்கள் மீதான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எவ்விதக் கட்சிப் பாகுபாடும் இன்றி காவல்துறை உடனடியாகச் சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தவெக நிர்வாகிகள் மீதான தொடர் பாலியல் புகார்கள் மற்றும் அதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள இந்தக் கடுமையான கண்டனம், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.