Posted in

அமெரிக்க வீரரின் சடலம் கரையில் ஒதுங்குவது போல் காட்சி: ஈரானில் திறக்கப்பட்ட அதிரடி விளம்பரப் பலகை!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ள புதிய விளம்பரப் பலகை ஒன்று சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹோமுஸ் ஜலசந்திக் கரையில் அமெரிக்க வீரர் ஒருவரின் சடலம் ஒதுங்குவது போலவும், அருகில் அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று சேதமடைந்து கிடப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பலகை, அமெரிக்காவிற்கு ஈரான் விடுக்கும் நேரடி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

வளைகுடாப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவ நடமாட்டம் மற்றும் முற்றுகை தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரான் புரட்சிகரக் காவல் படை (IRGC) ஆதரவுடன் இந்த ராட்சத விளம்பரப் பலகை வடிவமைக்கப்பட்டுள்ளது. “ஹோமுஸ் ஜலசந்திக்கு நுழையும் எதிரிகளுக்கு இதுவே கதி” என்ற தொனியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிப் படம், அமெரிக்கா ஏதேனும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால் அதன் விளைவு மிகக் கொடூரமாக இருக்கும் என்பதைப் பறைசாற்றுவதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே பாரசீக வளைகுடா பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக தெஹ்ரானின் முக்கிய சதுக்கங்களில் இத்தகைய பிரசாரப் பலகைகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றன. அமெரிக்கப் படைகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சப் போவதில்லை என்றும், தங்களது கடல் எல்லையைப் பாதுகாக்க ஈரான் ராணுவம் முழுத் தயார் நிலையில் உள்ளது என்றும் இதன் மூலம் ஈரான் உணர்த்த முயல்கிறது.

இந்த விளம்பரப் பலகை வெளியானது அமெரிக்க அரசியல் மற்றும் ராணுவ வட்டாரங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் போர் மூளும் அபாயம் நிலவி வரும் இக்காலக்கட்டத்தில், வளைகுடாப் பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் ஈரானின் இந்த உளவியல் போர் நடவடிக்கை அமைந்திருப்பதாகப் பாதுகாப்பு துறை வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.