Posted in

100 கோடி பயனர்களை எட்டிய கூகிள் ஜெமினி: இதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன?

செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் கூகிள் நிறுவனத்தின் ஜெமினி (Gemini) செயலி, 100 கோடி (1 Billion) மாதாந்திரச் சுறுசுறுப்பான பயனர்களைக் (Monthly Active Users – MAU) கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ள இந்த மைல்கல், கூகிள் வரலாற்றிலேயே மிகக் குறுகிய காலத்தில் 100 கோடி பயனர்களைச் சென்றடைந்த முதல் தயாரிப்பு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இருப்பினும், இந்த ‘100 கோடி’ எண்ணிக்கைக்கும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள புரிதலுக்கும் இடையே ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. பலர் இதனை சாட்ஜிபிடி (ChatGPT) அடைந்த 100 கோடி பயனர் எண்ணிக்கையுடன் நேரடியாக ஒப்பிடுகின்றனர். ஆனால், கூகிள் அறிவித்திருப்பது மாதாந்திர பயனர்களின் (MAU) எண்ணிக்கை; மாறாக சாட்ஜிபிடி வாராந்திர அடிப்படையில் (Weekly Active Users) 100 கோடி பயனர்களை எட்டியுள்ளது. வாராந்திரப் பயனர்களைக் கணக்கிடுவதே பயன்பாட்டின் தீவிரத்தை அளவிடும் கடினமான அளவுகோலாகும்.

மேலும், கூகிள் தேடுபொறியில் தோன்றும் ‘AI Overviews’ அம்சத்தைப் பயன்படுத்துபவர்கள் இந்த 100 கோடி கணக்கில் சேர்க்கப்படவில்லை. மாறாக, ஜெமினி செயலி அல்லது இணையதளத்திற்கு நேரில் சென்று கோரிக்கைகளை உள்ளிடும் பயனர்கள் மட்டுமே இதில் கணக்கிடப்பட்டுள்ளனர். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கூகிளின் இயல்பான இருப்பு இதற்கு உதவினாலும், ஐஓஎஸ் (iOS) இயங்குதளத்தில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமானோர் ஜெமினியைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

ஜெமினி பயனர்களின் பயன்பாட்டு முறையிலும் சுவாரசியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஜெமினியைப் பயன்படுத்தும் 63 சதவீதத்துக்கும் அதிகமான பயனர்கள் தட்டச்சு செய்வதற்குப் பதிலாகக் குரல்வழி உரையாடல் (Voice Input) மூலமாகவே தொடர்புகொள்கின்றனர் . செயற்கை நுண்ணறிவுச் சந்தையில் கூகிள் ஜெமினி மிகவேகமாக வளர்ந்து வந்தாலும், வழக்கமான பயன்பாட்டு அளவில் சாட்ஜிபிடியுடன் உண்மையான போட்டியை ஏற்படுத்த இன்னும் சில இலக்குகளைக் கடக்க வேண்டியுள்ளது.