Posted in

அமெரிக்க வீரர்களைக் கொல்ல $30,௦௦௦: ஈரானிய ராணுவத் தளபதி அமீர் ஹடாமியின் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்கெனவே போர்ப் பதற்றமும் மோதல்களும் உச்சத்தில் உள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைக் கொல்பவர்களுக்கு அல்லது சிறைபிடித்து ஒப்படைப்பவர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கப்படும் என ஈரானிய ராணுவத் தளபதி அமீர் ஹடாமி அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டின் அரசு ஊடகங்களில் வெளியான தகவலின்படி, படையெடுத்து வரும் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரைக் கொல்லும் அல்லது உயிருடன் பிடித்துக் கொடுக்கும் நபருக்கு 30,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் 5 பில்லியன் டோமன்களை) ஈரானிய ராணுவம் பரிசாக வழங்கும் எனத் தளபதி அமீர் ஹடாமி தெரிவித்துள்ளார். “நிதி ஜிஹாத்” என்ற அடிப்படையில் மக்களின் கோரிக்கைகளை ஏற்றே இந்தத் திட்டம் வகுக்கப்பட்டதாக ஈரான் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் குறிப்பாக, “துணிச்சலான ஈரானிய பெண்கள்” யாரேனும் அமெரிக்க வீரர்களைப் பிடித்துவந்தாலோ அல்லது தாக்கினாலோ அவர்களுக்கு இந்தப் பரிசுத்தொகை இருமடங்காக, அதாவது 60,000 டாலர்களாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் இருமடங்கு விலைக்கு அரசால் வாங்கப்பட்டு, அது எதிர்கால அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஈரான் எல்லைக்குள் தற்போது அமெரிக்கத் தரைப்படை வீரர்கள் யாரும் அதிகாரப்பூர்வமாக களமிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள சூழலில், ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் பாரசீக வளைகுடாப் பகுதிகளில் அமெரிக்கப் படைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்களை மேலும் அடர்த்தியாக்கியுள்ளது.