Posted in

அமெரிக்க தேர்தலில் வாக்காளா் அடையாள அட்டை கட்டாயமா? இந்திய தேர்தல் ஆணையரை மேற்கோள் காட்டிய டிரம்பின் புதிய அதிரடி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்தவும் வாக்காளர் அடையாள சான்றுகளைக் கட்டாயமாக்கவும் ‘சேவ் அமெரிக்கா ஆக்ட்’ (SAVE America Act) சட்டத்தைக் கொண்டுவரத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இந்தியத் தேர்தல் முறையையும், இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் கேள்வியையும் சுட்டிக்காட்டித் தமது கருத்துக்கு அவர் வலு சேர்த்துள்ளார்.

தமது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “அமெரிக்க நிர்வாக அதிகாரிகளிடம் பேசிய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், புகைப்படத்துடன் கூடிய செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாவிட்டால் அமெரிக்காவில் எவ்வாறு தேர்தலை நடத்த முடியும் என்று வியப்புடன் கேட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இந்த நடைமுறை மிகச் சிறப்பாகச் செயல்படுவதை அவர் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்தியாவின் தேர்தல் பிரம்மாண்டத்தை விவரித்த டிரம்ப், “கடந்த இந்தியப் பொதுத் தேர்தலில் சுமார் 64.6 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர். அவர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தபால் மூலம் வாக்களித்தனர்; எஞ்சிய ஒவ்வொரு வாக்காளரும் கட்டாயம் புகைப்பட அடையாள அட்டையைக் காண்பித்தே வாக்களித்தனர்” என்று சுட்டிக்காட்டினார். மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட இந்தியாவிலேயே இது சாத்தியப்படும் போது, அமெரிக்காவிலும் இத்தகைய கடுமையான விதியை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள ‘சேவ் அமெரிக்கா ஆக்ட்’ சட்டத்தின்படி, அமெரிக்கத் தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்யும் ஒவ்வொரு நபரும் அமெரிக்கக் குடியுரிமைக்கான சான்றிதழையும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையையும் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படும். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க இந்தச் சட்டம் அவசியமானது என டிரம்ப் தரப்பு வாதிட்டாலும், உரிய ஆவணங்கள் இல்லாத மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் வாக்களிக்கும் உரிமை இதனால் பாதிக்கப்படலாம் என எதிர்த்தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.