Posted in

ரூ.2.9 கோடிக்கு ஏலம் போன அரிய வகை வல்லூறு! – சவூதி ஏலத்தில் புதிய உலக சாதனை!

சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு அருகில் நடைபெற்று வரும் சர்வதேச வல்லூறு வளர்ப்பாளர்கள் ஏலத்தில் Gyr Super White Falcon ரகத்தைச் சேர்ந்த இளம் வல்லூறு ஒன்று 1.3 மில்லியன் சவூதி ரியால்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ₹2.9 கோடி / 3,46,000 அமெரிக்க டாலர்) ஏலம் போயுள்ளது. இந்த ஆண்டின் ஏலப் போட்டியில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட பறவையாக இது வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஜிம் வில்சன் வளர்ப்புப் பண்ணையில் பிறந்த இந்த அரிய வகை ‘சூப்பர் வொயிட்’ வல்லூறைக் கைப்பற்ற ஏல களத்தில் கடும் போட்டி நிலவியது. தொடக்கத்தில் 2,00,000 சவூதி ரியால்களில் (சுமார் ₹45 லட்சம்) தொடங்கிய ஏலத் தொகை, வளர்ப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் கடுமையான போட்டியால் சில நிமிடங்களிலேயே ₹2.9 கோடியைத் தொட்டது.

சவூதி அரேபியாவில் வல்லூறு வளர்ப்பும் அது தொடர்பான பந்தயங்களும் பாரம்பரியக் கௌரவமாகவும் பெரும் விளையாட்டுப் போட்டியாகவும் பார்க்கப்பட்டு வருகின்றன. இந்த ஏலத்தில் வாங்கப்படும் அரிய வகை பறவைகள் சவூதி அரேபியாவில் நடைபெறும் புகழ்பெற்ற வல்லூறு பந்தயங்களில் நேரடியாகப் பங்கேற்கும் தகுதியைப் பெறுகின்றன. இந்த ஆண்டின் பந்தய சீசனுக்காக மட்டும் சுமார் 12.5 மில்லியன் டாலர் (சுமார் ₹100 கோடி) பரிசுத் தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் ‘அல்ட்ரா வொயிட்’ ரக வல்லூறு ஒன்று 1.75 மில்லியன் ரியால்களுக்கு (சுமார் ₹3.9 கோடி) ஏலம் போனதே இந்த ஏல அமைப்பின் வரலாற்றில் மிக அதிகபட்ச சாதனையாக உள்ளது. இருப்பினும், தற்போதைய 2026 ஏலத்தில் இந்த கனேடிய வல்லூறு பெற்றுள்ள சாதனை விலை, சர்வதேச அளவில் பறவை ஆர்வலர்கள் மற்றும் வல்லூறு வளர்ப்பாளர்களிடையே பெரும் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.