Posted in

உலக அழிவிலிருந்து தப்பிக்க புதிய வழி? கோடீஸ்வரர்களுக்காக உருவாகும் சுவிஸ் பாதாள அரண்கள்!

உலக அளவில் அதிகரித்து வரும் போர்கள், காலநிலை மாற்றம் மற்றும் பேரழிவுகள் குறித்த பயத்தால் உலகின் முன்னணி தொழிலதிபர்களும் பெரும் பணக்காரர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய பெரும் பணக்காரர்களின் தேவையை பூர்த்தி செய்ய சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘ஒபிடம்’ (Oppidum) என்ற பொறியியல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம், ‘எல் ஹெரிடேஜ்’ (L’Heritage) போன்ற அதிநவீன சொகுசு பாதாள பாதுகாப்பு அரண்களை (Doomsday Bunkers) வடிவமைத்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பூமிக்கு அடியில் சுமார் 49 அடிகள் ஆழத்தில் கட்டப்படும் இந்த பிரம்மாண்டமான பாதுகாப்பு அரண்கள், அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் அதே உயர்தர கான்கிரீட் சுவர்களால் உருவாக்கப்படுகின்றன. இதனால் அணுஆயுதத் தாக்குதல்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களிலிருந்து முற்றிலும் பாதுகாப்பு பெற முடியும். இதற்கான ஆரம்பக் கட்டடச் செலவு மட்டும் சுமார் $100 மில்லியன் டாலர்களை எட்டுகிறது.

வெறும் பாதுகாப்பை மட்டும் தராமல், 5 நட்சத்திர சொகுசு ஹோட்டல்களை விஞ்சும் வகையில் இவை உருவாக்கப்படுகின்றன. இந்த பாதாள நிலவறைகளுக்குள் நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள், கலைக்கூடங்கள் மற்றும் செயற்கை சூரிய ஒளி வசதியுடன் கூடிய உட்புற தோட்டங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வெளிப்புற உலகை நேரடியாகப் பார்ப்பது போன்ற உணர்வைத் தர டிஜிட்டல் ஜன்னல் அமைப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன.

சுவாசிக்க தூய்மையான காற்றை வழங்கும் NBC தரத்திலான காற்று வடிகட்டிகள், சொந்தமாக மின்சாரம் தயாரிக்கும் ஜெனரேட்டர்கள், நீர் மற்றும் உணவைச் சேகரிக்கும் அமைப்புகள் மூலம் இந்த நிலவறைகளில் தங்கும் பணக்காரர்கள் பல ஆண்டுகள் வரை வெளிப்புற உதவி இல்லாமல் வாழ முடியும். உலகளவில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையால், முன்னணி பில்லியனர்கள் பலரும் தங்களது எதிர்கால பாதுகாப்பிற்காக இதுபோன்ற அதிநவீன பாதாள நிலவறைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.