Posted in

உலகின் இளம் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்.. 16 வயது இந்திய இளைஞர் படைத்த சாதனை!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயதான லக்ஷ்மணன் மெய்யப்பன் என்ற மாணவர், உலகின் மிக இள வயது சார்ட்டர்ட் அகாவுன்டண்ட் (Youngest Chartered Accountant) என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் வசித்து வரும் இவர், தனது 16 ஆண்டுகள் மற்றும் 170 நாட்களில் புகழ்பெற்ற சர்வதேச ‘ACCA’ (Association of Chartered Certified Accountants) தகுதியை நிறைவு செய்து இந்த பிரம்மாண்ட இலக்கை எட்டியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த போது, 10-ஆம் வகுப்பு முடித்த லக்ஷ்மணனுக்கு அவரது தாயார் அடிப்படை கணக்கியல் கருத்துகளை அறிமுகப்படுத்தினார். நிதித் துறையின் மீதான ஆர்வம் காரணமாக 15 வயதிலேயே ACCA படிப்பில் இணைந்த லக்ஷ்மணன், வெறும் ஓராண்டு காலத்தில் அப்படிப்பின் அனைத்து நிலைகளையும் வெற்றிகரமாகக் கடந்து சர்வதேச நிதி வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

இளவயதிலேயே இந்தச் சாதனையைப் படைத்த போதிலும், தனது இலக்கை இத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் சர்வதேச அளவில் முதலீட்டுத் துறையில் புகழ்பெற்ற ‘CFA’ (Chartered Financial Analyst) பட்டத்தையும் தனது 18 வயதிற்குள் பெற்றார். தற்போது 21 வயதாகும் லக்ஷ்மணன், துபாயில் உள்ள ‘செஞ்சுரி ஃபைனான்சியல்’ நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சி பகுப்பாய்வாளராகப் (Senior Research Analyst) பணியாற்றி வருவதோடு, முதுகலை நிதிப் படிப்பையும் (MSc in Finance) தொடர்ந்து வருகிறார்.

தனது வெற்றி குறித்துப் பேசிய லக்ஷ்மணன், “வேகத்தை விடக் கற்றல் மீதான ஆர்வமே கற்றலின் முடிவைப் பயனுள்ளதாக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். நிதித் துறை தவிர்த்து ஓய்வு நேரத்தில் கடிகாரங்களை வடிவமைத்துக் கட்டமைக்கும் வித்தியாசமான பொழுதுபோக்கையும் கொண்டுள்ள இந்த இந்திய இளைஞரின் சாதனை, உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.