Posted in

வடகொரியாவை தொடர்ந்தும் கோவப்படுத்தும் அமெரிக்காவின் செயல்கள் ?

கொரியத் தீபகற்ப பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழலுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவங்கள் இணைந்து மேற்கொண்டு வரும் வருடாந்திர ‘உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட்’ (Ulchi Freedom Shield) கூட்டுப் போர் பயிற்சியைக் கடுமையாகச் சாடி வடகொரியா அறிக்கை வெளியிட்டுள்ளது. இக்கூட்டு ராணுவப் பயிற்சித் திட்டங்கள் தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்டுள்ள “மிகவும் உடனடி மற்றும் வெளிப்படையான அச்சுறுத்தல்” என வடகொரிய அரசு ஊடகம் எச்சரித்துள்ளது.

தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் நடத்தப்படும் இக்கூட்டுப் பயிற்சிகள், உண்மையில் தங்கள் நாட்டின் மீது படையெடுப்பதற்கான போர்ப் பயிற்சியே (War Rehearsal) என்று வடகொரிய வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பிராந்தியத்தில் அணுசக்தி அடிப்படையிலான ராணுவக் கூட்டமைப்பை வலுப்படுத்தி வருவதாகவும், இது ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் அணுஆயுதப் போரின் விளிம்பிற்குத் தள்ளுவதாகவும் வடகொரியா சாடியுள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் இந்த அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தித் தங்களின் தடுப்பு ஆற்றலை புதிய உச்சத்திற்கு உயர்த்துவோம் என வடகொரியா எச்சரித்துள்ளது. இப்போர்ப் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏவுகணைச் சோதனைகளை நடத்தித் தனது ராணுவ பலத்தை வெளிப்படுத்தி வருவது பிராந்தியத்தில் மேலதிகப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இருப்பினும், இந்த ‘உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட்’ பயிற்சியானது வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்யவும் மட்டுமே நடத்தப்படும் வழக்கமான தற்காப்புப் பயிற்சி என அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவத் தரப்புகள் விளக்கம் அளித்துள்ளன. இருதரப்பும் தங்களின் ராணுவ நகர்வுகளைத் தீவிரப்படுத்தி வருவதால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.